திருவருட்பா  52. காதல் விண்ணப்பம்

வஞ்சக  வினைக்கோர்  கொள்கலம்  அனைய  மனத்தினேன்  அனைத்தினும்  கொடியேன் 
தஞ்சம்என்  றடைந்தே  நின்திருக்  கோயில்  சந்நிதி  முன்னர்நிற்  கின்றேன் 
எஞ்சலில்  அடங்காப்  பாவிஎன்  றெனைநீ  இகழ்ந்திடில்  என்செய்வேன்  சிவனே 
கஞ்சன்மால்  புகழும்  ஒற்றியங்  கரும்பே  கதிதரும்  கருணையங்  கடலே. 
1
நிற்பது  போன்று  நிலைபடா  உடலை  நேசம்வைத்  தோம்புறும்  பொருட்டாய்ப் 
பொற்பது  தவிரும்  புலையர்தம்  மனைவாய்ப்  புந்திநொந்  தயர்ந்தழு  திளைத்தேன் 
சொற்பதங்  கடந்த  நின்திரு  வடிக்குத்  தொண்டுசெய்  நாளும்ஒன்  றுளதோ 
கற்பது  கற்றோர்  புகழ்திரு  வொற்றிக்  காவல்கொள்  கருணையங்  கடலே. 
2
முன்னைவல்  வினையால்  வஞ்சக  மடவார்  முழுப்புலைக்  குழிவிழுந்  திளைத்தேன் 
என்னையோ  கொடியேன்  நின்திரு  வருள்தான்  எய்தில  னேல்உயி‘க்  குறுதிப் 
பின்னைஎவ்  வணந்தான்  எய்துவ  தறியேன்  பேதையில்  பேதைநான்  அன்றோ 
கன்னலே  தேனே  ஒற்றிஎம்  அமுதே  கடவுளே  கருணையங்  கடலே. 
3
மண்ணினுள்  மயங்கி  வஞ்சக  வினையால்  மனந்தளர்ந்  தழுங்கிநாள்  தோறும் 
எண்ணினுள்  அடங்காத்  துயரொடும்  புலையர்  இல்லிடை  மல்லிடு  கின்றேன் 
விண்ணினுள்  இலங்கும்  சுடர்நிகர்  உனது  மெல்அடிக்  கடிமைசெய்  வேனோ 
கண்ணினுள்  மணியே  ஒற்றியங்  கனியே  கடவுளே  கருணையங்  கடலே. 
4
அளவிலா  உலகத்  தனந்தகோ  டிகளாம்  ஆருயிர்த்  தொகைக்குளும்  எனைப்போல் 
இளகிலா  வஞ்ச  நெஞ்சகப்  பாவி  ஏழைகள்  உண்டுகொல்  இலைகாண் 
தளர்விலா  துனது  திருவடி  எனும்பொற்  றாமரைக்  கணியனா  குவனோ 
களவிலார்க்  கினிய  ஒற்றிஎம்  மருந்தே  கனந்தரும்  கருணையங்  கடலே. 
5
ஞானம்என்  பதிலோர்  அணுத்துணை  யேனும்  நண்ணிலேன்  புண்ணியம்  அறியேன் 
ஈனம்என்  பதனுக்  கிறைஎனல்  ஆனேன்  எவ்வணம்  உய்குவ  தறியேன் 
வானநா  டவரும்  பெறற்கரு  நினது  மலரடித்  தொழும்புசெய்  வேனோ 
கானவேட்  டுருவாம்  ஒருவனே  ஒற்றிக்  கடவுளே  கருணையங்  கடலே. 
6
ஞாலவாழ்  வனைத்தும்  கானல்நீர்  எனவே  நன்கறிந்  துன்திரு  அருளாம் 
சீலவாழ்  வடையும்  செல்வம்இப்  பொல்லாச்  சிறியனும்  பெறுகுவ  தேயோ 
நீலமா  மிடற்றுப்  பவளமா  மலையே  நின்மல  ஆனந்த  நிலையே 
காலன்நாண்  அவிழ்க்கும்  காலனே  ஒற்றிக்  கடவுளே  கருணையங்  கடலே. 
7
மாலொடு  நான்கு  வதனனும்  காணா  மலரடிக்  கடிமைசெய்  தினிப்பாம் 
பாலொடு  கலந்த  தேன்என  உன்சீர்  பாடும்நாள்  எந்தநாள்  அறியேன் 
வேலொடு  மயிலும்  கொண்டிடுஞ்  சுடரை  விளைவித்த  வித்தக  விளக்கே 
காலொடு  பூதம்  ஐந்துமாம்  ஒற்றிக்  கடவுளே  கருணையங்  கடலே. 
8
சற்றும்நற்  குணந்தான்  சார்ந்திடாக்  கொடியார்  தந்தலை  வாயிலுள்  குரைக்கும் 
வெற்றுநாய்  தனக்கும்  வேறுநா  யாக  மெலிகின்றேன்  ஐம்புலச்  சேட்டை 
அற்றுநின்  றவர்க்கும்  அரியநின்  திருத்தாட்  கடிமைசெய்  தொழுகுவ  னேயோ 
கற்றுமுற்  றுணர்ந்தோர்க்  கருள்தரும்  ஒற்றிக்  கடவுளே  கருணையங்கடலே. 
9
மறைகளும்  இன்னும்  தலைத்தலை  மயங்க  மறைந்துல  குயிர்தொறும்  ஒளித்த 
இறைவநின்  திருத்தாட்  கன்பிலாக்  கொடியன்  என்னினும்  ஏழையேன்  தனக்கு 
நிறைதரும்  நினது  திருவருள்  அளிக்க  நினைத்தலே  நின்கடன்  கண்டாய் 
கறைமணி  மிடற்றுத்  தெய்வமே  ஒற்றிக்  காவல்கொள்  கருணையங்  கடலே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com