திருவருட்பா  60. பெரு விண்ணப்பம்

இருளார்  மனத்தேன்  இழுக்குடையேன்  எளியேன்  நின்னை  ஏத்தாத 
மருளார்  நெஞ்சப்  புலையரிடம்  வாய்ந்து  வருந்தி  மாழ்கின்றேன் 
அருளார்  அமுதப்  பெருக்கேஎன்  அரசே  அதுநீ  அறிந்தன்றோ 
தெருளார்  அன்பர்  திருச்சபையில்  சேர்க்கா  தலைக்கும்  திறம்அந்தோ. 
1
உண்மை  அறியேன்  எனினும்எனை  உடையாய்  உனையே  ஒவ்வொருகால் 
எண்மை  உடையேன்  நினைக்கின்றேன்  என்னே  உன்னை  ஏத்தாத 
வெண்மை  உடையார்  சார்பாக  விட்டாய்  அந்தோ  வினையேனை 
வண்மை  உடையாய்  என்செய்கேன்  மற்றோர்  துணைஇங்  கறியேனே. 
2
எளியேன்  இழைத்த  பெறும்பிழைகள்  எல்லாம்  பொறுத்திங்  கின்பளித்தாய் 
களியேன்  தனைநீ  இனிஅந்தோ  கைவிட்  டிடில்என்  கடவேனே 
ஒளியே  முக்கட்  செழுங்கரும்பே  ஒன்றே  அன்பர்  உறவேநல் 
அளியே  பரம  வெளியேஎன்  ஐயா  அரசே  ஆரமுதே. 
3
காமக்  கடலில்  படிந்தஞராம்  கடலில்  விழுந்தேன்  கரைகாணேன் 
ஏமக்  கொடுங்கூற்  றெனும்மகரம்  யாது  செயுமோ  என்செய்கேன் 
நாமக்  கவலை  ஒழித்துன்றாள்  நண்ணும்  அவர்பால்  நண்ணுவித்தே 
தாமக்  கடிப்பூஞ்  சடையாய்உன்  தன்சீர்  பாடத்  தருவாயே. 
4
எண்ணா  தெளியேன்  செயும்பிழைகள்  எல்லாம்  பொறுத்திங்  கெனையாள்வ 
தண்ணா  நினது  கடன்கண்டாய்  அடியேன்  பலகால்  அறைவதென்னே 
கண்ணார்  நுதற்செங்  கரும்பேமுக்  கனியே  கருணைக்  கடலேசெவ் 
வண்ணா  வெள்ளை  மால்விடையாய்  மன்றா  டியமா  மணிச்சுடரே. 
5
பாலே  அமுதே  பழமேசெம்  பாகே  எனும்நின்  பதப்புகழை 
மாலே  அயனே  இந்திரனே  மற்றைத்  தேவ  ரேமறைகள் 
நாலே  அறியா  தெனில்சிறியேன்  நானோ  அறிவேன்  நாயகஎன் 
மேலே  அருள்கூர்ந்  தெனைநின்தாள்  மேவு  வோர்பால்  சேர்த்தருளே. 
6
கண்ணார்  நுதலோய்  பெருங்கருணைக்  கடலோய்  கங்கை  மதிச்சடையோய் 
பெண்ணார்  இடத்தோய்  யாவர்கட்கும்  பெரியோய்  கரியோன்  பிரமனொடும் 
அண்ணா  எனநின்  றேத்தெடுப்ப  அமர்ந்தோய்  நின்றன்  அடிமலரை 
எண்ணா  துழல்வோர்  சார்பாக  இருக்கத்  தரியேன்  எளியேனே. 
7
பொய்யோர்  அணியா  அணிந்துழலும்  புலையேன்  எனினும்  புகல்இடந்தான் 
ஐயோ  நினது  பதம்அன்றி  அறியேன்  இதுநீ  அறியாயோ 
கைஓர்  அனல்வைத்  தாடுகின்ற  கருணா  நிதியே  கண்ணுதலே 
மெய்யோர்  விரும்பும்  அருமருந்தே  வேத  முடிவின்  விழுப்பொருளே. 
8
இன்னே  எளியேன்  பொய்யுடையேன்  எனினும்  அடியன்  அலவோநான் 
என்னே  நின்னைத்  துதியாதார்  இடத்தில்  என்னை  இருத்தினையே 
அன்னே  என்றன்  அப்பாஎன்  ஐயா  என்றன்  அரசேசெம் 
பொன்னே  முக்கட்  பொருளேநின்  புணர்ப்பை  அறியேன்  புலையேனே. 
9
வஞ்ச  மடவார்  மயலொருபால்  மணியே  நின்னை  வழுத்தாத 
நஞ்சம்  அனையார்  சார்பொருபால்  நலியும்  வாழ்க்கைத்  துயர்ஒருபால் 
விஞ்சும்  நினது  திருவருளை  மேவா  துழலும்  மிடிஒருபால் 
எஞ்சல்  இலவாய்  அலைக்கின்ற  தென்செய்  கேன்இவ்  எளியேனே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com