திருவருட்பா  104. உலகர்க்கு உய்வகை கூறல்

கட்டோடே  கனத்தோடே  வாழ்கின்றோம்  என்பீர் 
கண்ணோடே  கருத்தோடே  கருத்தனைக்  கருதீர் 
பட்டோடே  பணியோடே  திரிகின்றீர்  தெருவில் 
பசியோடே  வந்தாரைப்  பார்க்கவும்  நேரீர் 
கொட்டோடே  முழக்கோடே  கோலங்காண்  கின்றீர் 
குணத்தோடே  குறிப்போடே  குறிப்பதைக்  குறியீர் 
எட்டோடே  இரண்டுசேர்த்  தெண்ணவும்  அறியீர் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
1
ஆறாமல்  அவியாமல்  அடைந்தகோ  பத்தீர் 
அடர்வுற  உலகிடை  அஞ்சாது  திரிவீர் 
மாறாமல்  மனஞ்சென்ற  வழிசென்று  திகைப்பீர் 
வழிதுறை  காண்கிலீர்  பழிபடும்  படிக்கே 
நாறாத  மலர்போலும்  வாழ்கின்றீர்  மூப்பு 
நரைதிரை  மரணத்துக்  கென்செயக்  கடவீர் 
ஏறாமல்  வீணிலே  இறங்குகின்  றீரே 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
2
ஆயாமை  யாலேநீர்  ஆதிஅ  னாதி 
ஆகிய  சோதியை  அறிந்துகொள்  கில்லீர் 
மாயாமை  பிறவாமை  வழியொன்றும்  உணரீர் 
மறவாமை  நினையாமை  வகைசிறி  தறியீர் 
காயாமை  பழுக்கின்ற  கருத்தையும்  கருதீர் 
கண்மூடித்  திரிகின்றீர்  கனிவொடும்  இரப்போர்க் 
கீயாமை  ஒன்றையே  இன்துணை  என்பீர் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
3
சாமாந்தர்  ஆகாத்  தரஞ்சிறி  துணரீர் 
தத்துவ  ஞானத்தை  இற்றெனத்  தெரியீர் 
மாமாந்த  நோயுற்ற  குழவியில்  குழைந்தீர் 
வாழ்க்கையி  லேஅற்ப  மகிழ்ச்சியும்  பெற்றீர் 
காமாந்த  காரத்தில்  கண்மூடித்  திரிவீர் 
கற்பன  கற்கிலீர்  கருத்தனைக்  கருதா 
தேமாந்து  தூங்குகின்  றீர்விழிக்  கின்றீர் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
4
அச்சையும்  உடம்பையும்  அறிவகை  அறியீர் 
அம்மையும்  அப்பனும்  ஆர்எனத்  தெரியீர் 
பச்சையும்  செம்மையும்  கருமையும்  கூடிப் 
பலித்தநும்  வாழ்க்கையில்  பண்பொன்றும்  இல்லீர் 
பிச்சையிட்  டுண்ணவும்  பின்படு  கின்றீர் 
பின்படு  தீமையின்  முன்படு  கின்றீர் 
இச்சையில்  கண்மூடி  எச்சகம்  கண்டீர் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
5
வட்டிமேல்  வட்டிகொள்  மார்க்கத்தில்  நின்றீர் 
வட்டியை  வளர்க்கின்ற  மார்க்கத்தை  அறியீர் 
பெட்டிமேல்  பெட்டிவைத்  தாள்கின்றீர்  வயிற்றுப் 
பெட்டியை  நிரப்பிக்கொண்  டொட்டியுள்  இருந்தீர் 
பட்டினி  கிடப்பாரைப்  பார்க்கவும்  நேரீர் 
பழங்கஞ்சி  ஆயினும்  வழங்கவும்  நினையீர் 
எட்டிபோல்  வாழ்கின்றீர்  கொட்டிபோல்  கிளைத்தீர் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
6
வன்சொல்லின்  அல்லது  வாய்திறப்  பறியீர் 
வாய்மையும்  தூய்மையும்  காய்மையில்  வளர்ந்தீர் 
முன்சொல்லும்  ஆறொன்று  பின்சொல்வ  தொன்றாய் 
மூட்டுகின்  றீர்வினை  மூட்டையைக்  கட்டி 
மன்சொல்லும்  மார்க்கத்தை  மறந்துதுன்  மார்க்க 
வழிநடக்  கின்றீர்அம்  மரணத்தீர்ப்  புக்கே 
என்சொல்ல  இருக்கின்றீர்  பின்சொல்வ  தறியீர் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
7
துன்மார்க்க  நடையிடைத்  தூங்குகின்  றீரே 
தூக்கத்தை  விடுகின்ற  துணைஒன்றும்  கருதீர் 
சன்மார்க்க  சங்கத்தைச்  சார்ந்திட  விழையீர் 
சாவையும்  பிறப்பையும்  தவிர்ந்திட  விரும்பீர் 
பன்மார்க்கம்  செல்கின்ற  படிற்றுளம்  அடக்கீர் 
பசித்தவர்  தம்முகம்  பார்த்துண  வளியீர் 
என்மார்க்கம்  எச்சுகம்  யாதுநும்  வாழ்க்கை 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
8
பொய்கட்டிக்  கொண்டுநீர்  வாழ்கின்றீர்  இங்கே 
புலைகட்டிக்  கொண்டஇப்  பொய்யுடல்  வீழ்ந்தால் 
செய்கட்டி  வாழ்கின்ற  செருக்கற்று  நரகில் 
சிறுபுழு  ஆகித்  திகைத்திடல்  அறியீர் 
கைகட்டி  வாய்பொத்தி  நிற்பாரைக்  கண்டே 
கைகொட்டிச்  சிரிக்கின்றீர்  கருணைஒன்  றில்லீர் 
எய்கட்டி  இடைமொய்க்கும்  ஈயினும்  சிறியீர் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
9
பண்ணாத  தீமைகள்  பண்ணுகின்  றீரே 
பகராத  வன்மொழி  பகருகின்  றீரே 
நண்ணாத  தீயினம்  நண்ணுகின்  றீரே 
நடவாத  நடத்தைகள்  நடக்கவந்  தீரே 
கண்ணாகக்  காக்கின்ற  கருத்தனை  நினைந்தே 
கண்ணார  நீர்விட்டுக்  கருதறி  யீரே 
எண்ணாத  தெண்ணவும்  நேரும்ஓர்  காலம் 
எத்துணை  கொள்கின்றீர்  பித்துல  கீரே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com