திருவருட்பா  106. சுத்த சிவநிலை

கண்ணிற்  கலந்தான்  கருத்திற்  கலந்தான்என் 
எண்ணிற்  கலந்தே  இருக்கின்றான்  -  பண்ணிற் 
கலந்தான்என்  பாட்டிற்  கலந்தான்  உயிரில் 
கலந்தான்  கருணை  கலந்து. 
1
எல்லா  நலமும்  எனக்கே  கொடுக்கின்றான் 
எல்லாம்  செயவல்லான்  என்பெருமான்  -  எல்லாமாய் 
நின்றான்  பொதுவில்  நிருத்தம்  புரிகின்றான் 
ஒன்றாகி  நின்றான்  உவந்து. 
2
எண்ணுகின்றேன்  எண்ணங்கள்  எல்லாம்  தருகின்றான் 
பண்ணுகின்றேன்  பண்ணுவித்துப்  பாடுகின்றான்  -  உண்ணுகின்றேன் 
தெள்ளமுதம்  உள்ளந்  தெளியத்  தருகின்றான் 
வள்ளல்நட  ராயன்  மகிழ்ந்து. 
3
சித்தியெலாந்  தந்தே  திருவம்  பலத்தாடும் 
நித்தியனென்  உள்ளே  நிறைகின்றான்  -  சத்தியம்ஈ 
தந்தோ  உலகீர்  அறியீரோ  நீவிரெலாம் 
சந்தோட  மாய்இருமின்  சார்ந்து. 
4
அய்யாஎன்  றோர்கால்  அழைக்கின்றேன்  அப்பொழுதே 
எய்யேன்  மகனேஎன்  றெய்துகின்றான்  -  ஐயோஎன் 
அப்பன்  பெருங்கருணை  யார்க்குண்  டுலகத்தீர் 
செப்பமுடன்  போற்றுமினோ  சேர்ந்து. 
5
அப்பாஎன்  றோர்கால்  அழைக்கின்றேன்  அப்பொழுதே 
அப்பா  மகனேஎன்  றார்கின்றான்  -  துப்பார் 
சடையான்சிற்  றம்பலத்தான்  தானேதான்  ஆனான் 
உடையான்  உளத்தே  உவந்து. 
6
தானேவந்  தென்உளத்தே  சார்ந்து  கலந்துகொண்டான் 
தானே  எனக்குத்  தருகின்றான்  -  தானேநான் 
ஆகப்  புரிந்தானென்  அப்பன்  பெருங்கருணை 
மேகத்திற்  குண்டோ  விளம்பு. 
7
பாலும்  கொடுத்தான்  பதிதிறக்கும்  ஓர்திறவுக் 
கோலும்  கொடுத்தான்  குணங்கொடுத்தான்  -  காலும் 
தலையும்  அறியும்  தரமும்  கொடுத்தான் 
நிலையும்  கொடுத்தான்  நிறைந்து. 
8
வெவ்வினையும்  மாயை  விளைவும்  தவிர்ந்தனவே 
செவ்வைஅறி  வின்பம்  சிறந்தனவே  -  எவ்வயினும் 
ஆனான்சிற்  றம்பலத்தே  ஆடுகின்றான்  தண்அருளாம் 
தேன்நான்  உண்  டோங்கியது  தேர்ந்து. 
9
வஞ்சவினை  எல்லாம்  மடிந்தனவன்  மாயைஇருள் 
அஞ்சிஎனை  விட்டே  அகன்றனவால்  -  எஞ்சலிலா 
இன்பமெலாம்  என்றனையே  எய்தி  நிறைந்தனவால் 
துன்பமெலாம்  போன  தொலைந்து. 
10
அம்மை  திரோதை  அகன்றாள்  எனைவிரும்பி 
அம்மையருட்  சத்தி  அடைந்தனளே  -  இம்மையிலே 
மாமாயை  நீங்கினள்பொன்  வண்ணவடி  வுற்றதென்றும் 
சாமா  றிலைஎனக்குத்  தான். 
11
நானே  தவம்புரிந்தேன்  நானிலத்தீர்  அம்பலவன் 
தானேவந்  தென்னைத்  தடுத்தாண்டான்  -  ஊனே 
புகுந்தான்என்  உள்ளம்  புகுந்தான்  உயிரில் 
புகுந்தான்  கருணை  புரிந்து. 
12
ஒன்றே  சிவம்என்  றுணர்ந்தேன்  உணர்ந்தாங்கு 
நின்றேமெய்ஞ்  ஞான  நிலைபெற்றேன்  -  நன்றேமெய்ச் 
சித்தியெலாம்  பெற்றேன்  திருஅம்ப  லத்தாடி 
பத்திஎலாம்  பெற்ற  பலன். 
13
தூக்கங்  கெடுத்தான்  சுகங்கொடுத்தான்  என்னுளத்தே 
ஏக்கந்  தவிர்த்தான்  இருள்அறுத்தான்  -  ஆக்கமிகத் 
தந்தான்  எனைஈன்ற  தந்தையே  என்றழைக்க 
வந்தான்என்  அப்பன்  மகிழ்ந்து. 
14
வாட்டமெலாம்  தீர்த்தான்  மகிழ்வளித்தான்  மெய்ஞ்ஞான 
நாட்டமெலாம்  தந்தான்  நலங்கொடுத்தான்  -  ஆட்டமெலாம் 
ஆடுகநீ  என்றான்தன்  ஆனந்த  வார்கழலைப் 
பாடுகநீ  என்றான்  பரன். 
15
தான்நான்  எனும்பேதந்  தன்னைத்  தவிர்த்தான்நான் 
ஆனான்சிற்  றம்பலவன்  அந்தோநான்  -  வானாடர் 
செய்தற்  கரியதவம்  செய்தேன்  மகிழ்கின்றேன் 
எய்தற்  கரியசுகம்  ஏய்ந்து. 
16
சுத்த  வடிவும்  சுகவடிவாம்  ஓங்கார 
நித்த  வடிவும்  நிறைந்தோங்கு  -  சித்தெனும்ஓர் 
ஞான  வடிவுமிங்கே  நான்பெற்றேன்  எங்கெங்கும் 
தானவிளை  யாட்டியற்றத்  தான். 
17
நான்உரைக்கும்  வார்த்தைஎலாம்  நாயகன்சொல்  வார்த்தைஅன்றி 
நான்உரைக்கும்  வார்த்தைஅன்று  நாட்டீர்நான்  -  ஏன்உரைப்பேன் 
நான்ஆர்  எனக்கெனஓர்  ஞானஉணர்  வேதுசிவம் 
ஊன்நாடி  நில்லா  உழி. 
18
ஆரணமும்  ஆகமமும்  ஆங்காங்  குரைக்கின்ற 
காரணமும்  காரியமும்  காட்டுவித்தான்  -  தாரணியில் 
கண்டேன்  களிக்கின்றேன்  கங்குல்பகல்  அற்றவிடத் 
துண்டேன்  அமுதம்  உவந்து. 
19
துன்மார்க்கம்  எல்லாம்  தொலைத்துவிட்டேன்  சுத்தசிவ 
சன்மார்க்க  சங்கம்  தலைப்பட்டேன்  -  என்மார்க்கம் 
நன்மார்க்கம்  என்றேவான்  நாட்டார்  புகழ்கின்றார் 
மன்மார்க்கத்  தாலே  மகிழ்ந்து. 
20
பன்மார்க்கம்  எல்லாம்  பசையற்  றொழிந்தனவே 
சன்மார்க்கம்  ஒன்றே  தழைத்ததுவே  -  சொன்மார்க்கத் 
தெல்லா  உலகும்  இசைந்தனவே  எம்பெருமான் 
கொல்லா  நெறிஅருளைக்  கொண்டு. 
21
சாதிகுலம்  என்றும்  சமயமதம்  என்றுமுப 
நீதிஇயல்  ஆச்சிரம  நீட்டென்றும்  -  ஓதுகின்ற 
பேயாட்ட  மெல்லாம்  பிதிர்ந்தொழிந்த  வேபிறர்தம் 
வாயாட்டம்  தீர்ந்தனவே  மற்று. 
22
சிந்தா  குலந்தவிர்த்துச்  சிற்றம்  பலப்பெருமான் 
வந்தான்  எனைத்தான்  வலிந்தழைத்தே  -  ஐந்தொழிலும் 
நீயேசெய்  என்றெனக்கே  நேர்ந்தளித்தான்  என்னுடைய 
தாயே  அனையான்  தனித்து. 
23
கூகா  எனஅடுத்தோர்  கூடி  அழாதவண்ணம் 
சாகா  வரம்எனக்கே  தந்திட்டான்  -  ஏகாஅன் 
ஏகா  எனமறைகள்  ஏத்துஞ்சிற்  றம்பலத்தான் 
மாகா  தலனா  மகிழ்ந்து. 
24
நாடுகின்ற  தெம்பெருமான்  நாட்டமதே  நான்உலகில் 
ஆடுகின்ற  தெந்தைஅருள்  ஆட்டமதே  -  பாடுகின்ற 
பாட்டெல்லாம்  அம்பலவன்  பாத  மலர்ப்பாட்டே 
நீட்டெல்லாம்  ஆங்கவன்றன்  நீட்டு. 
25
சத்தியஞ்செய்  கின்றேன்  சகத்தீர்  அறிமின்கள் 
சித்திஎலாம்  வல்ல  சிவம்ஒன்றே  -  நித்தியம்என் 
றெண்ணுமெண்ணத்  தாலேநம்  எண்ணமெலாம்  கைகூடும் 
நண்ணுமின்பத்  தேன்என்று  நான். 
26
நானே  தவம்புரிந்தேன்  நம்பெருமான்  நல்லருளால் 
நானே  அருட்சித்தி  நாடடைந்தேன்  -  நானே 
அழியா  வடிவம்  அவைமூன்றும்  பெற்றேன் 
இழியாமல்  ஆடுகின்றேன்  இங்கு. 
27
எவ்வுலகும்  அண்டங்கள்  எத்தனையும்  நான்காண 
இவ்வுலகில்  எந்தை  எனக்களித்தான்  -  எவ்வுயிரும் 
சன்மார்க்க  சங்கம்  தனைஅடையச்  செய்வித்தே 
என்மார்க்கம்  காண்பேன்  இனி. 
28
சாத்திரங்கள்  எல்லாம்  தடுமாற்றம்  சொல்வதன்றி 
நேத்திரங்கள்  போற்காட்ட  நேராவே  -  நேத்திரங்கள் 
சிற்றம்  பலவன்  திருவருட்சீர்  வண்ணமென்றே 
உற்றிங்  கறிந்தேன்  உவந்து. 
29
வேதாக  மங்களென்று  வீண்வாதம்  ஆடுகின்றீர் 
வேதாக  மத்தின்  விளைவறியீர்  -  சூதாகச் 
சொன்னவலால்  உண்மைவெளி  தோன்ற  உரைக்கவிலை 
என்ன  பயனோ  இவை. 
30
சாகாத  கல்வித்  தரம்அறிதல்  வேண்டுமென்றும் 
வேகாத  கால்உணர்தல்  வேண்டுமுடன்  -  சாகாத் 
தலைஅறிதல்  வேண்டும்  தனிஅருளால்  உண்மை 
நிலைஅடைதல்  வேண்டும்  நிலத்து. 
31
பொய்உரைஎன்  றெண்ணுதிரேல்  போமின்  புறக்கடையில் 
மெய்யுரைஎன்  றெண்ணுதிரேல்  மேவுமினோ  -  ஐயனருள் 
சித்திஎலாம்  வல்ல  திருக்கூத்  துலவாமல் 
இத்தினந்தொட்  டாடுகிற்பான்  இங்கு. 
32
வான்வந்த  தேவர்களும்  மால்அயனும்  மற்றவரும் 
தான்வந்து  சூழ்ந்தார்  தலைக்கடையில்  -  தேன்வந்த 
மங்கை  சிவகாம  வல்லியொடும்  எம்பெருமான் 
இங்குநடஞ்  செய்வான்  இனி. 
33
சத்திஎலாம்  கொண்டதனித்  தந்தை  நடராயன் 
சித்திஎலாம்  வல்லான்  திருவாளன்  -  நித்தியன்தான் 
ஊழிபல  சென்றாலும்  ஓவாமல்  இவ்விடத்தே 
வாழிநடஞ்  செய்வான்  மகிழ்ந்து. 
34
இன்று  தொடங்கியிங்கே  எம்பெருமான்  எந்நாளும் 
நன்று  துலங்க  நடம்புரிவான்  -  என்றுமென்சொல் 
சத்தியம்என்  றெண்ணிச்  சகத்தீர்  அடைமின்கள் 
நித்தியம்பெற்  றுய்யலாம்  நீர். 
35
என்உடலும்  என்பொருளும்  என்உயிரும்  தான்கொண்டான் 
தன்உடலும்  தன்பொருளும்  தன்உயிரும்  -  என்னிடத்தே 
தந்தான்  அருட்சிற்  சபையப்பா  என்றழைத்தேன் 
வந்தான்வந்  தான்உள்  மகிழ்ந்து. 
36
செத்தாரை  எல்லாம்  திரும்ப  எழுப்புதல்இங் 
கெத்தால்  முடியுமெனில்  எம்மவரே  -  சித்தாம் 
அருட்பெருஞ்  சோதி  அதனால்  முடியும் 
தெருட்பெருஞ்  சத்தியம்ஈ  தே. 
37
இவ்வுலகில்  செத்தாரை  எல்லாம்  எழுகஎனில் 
எவ்வுலகும்  போற்ற  எழுந்திருப்பார்  -  செவ்வுலகில் 
சிற்றம்  பலத்தான்  திருவருள்பெற்  றார்நோக்கம் 
உற்றவரை  உற்றவர்கள்  உற்று. 
38
யான்புரிதல்  வேண்டுங்கொல்  இவ்வுலகில்  செத்தாரை 
ஊன்புரிந்து  மீள  உயிர்ப்பித்தல்  -  வான்  புரிந்த 
அம்பலத்தான்  நல்லருளால்  அந்தோநான்  மேற்போர்த்த 
கம்பலத்தால்  ஆகும்  களித்து. 
39
என்னே  உலகில்  இறந்தார்  எழுதல்மிக 
அன்னே  அதிசயமென்  றாடுகின்றார்  -  இன்னே 
திருவம்  பலத்தான்  திருநோக்கம்  பெற்றார்க் 
குருவம்  பலத்தேஎன்  றுன். 
40
ஆடாதீர்  சற்றும்  அசையாதீர்  வேறொன்றை 
நாடாதீர்  பொய்உலகை  நம்பாதீர்  -  வாடாதீர் 
சன்மார்க்க  சங்கத்தைச்  சார்வீர்  விரைந்தினிஇங் 
கென்மார்க்க  மும்ஒன்றா  மே. 
41
மார்க்கமெலாம்  ஒன்றாகும்  மாநிலத்தீர்  வாய்மைஇது 
தூக்கமெலாம்  நீக்கித்  துணிந்துளத்தே  -  ஏக்கம்விட்டுச் 
சன்மார்க்க  சங்கத்தைச்  சார்ந்திடுமின்  சத்தியம்நீர் 
நன்மார்க்கம்  சேர்வீர்இந்  நாள். 
42
இந்நாளே  கண்டீர்  இறந்தார்  எழுகின்ற 
நன்னாள்என்  வார்த்தைகளை  நம்புமினோ  -  இந்நாள் 
அருட்பெருஞ்  சோதி  அடைகின்ற  நாள்மெய் 
அருட்பெருஞ்  சத்தியம்ஈ  தாம். 
43
ஏமாந்  திருக்கும்  எமரங்காள்  இவ்வுலகில் 
சாமாந்தர்  ஆகாத்  தரம்பெறவே  -  காமாந்த 
காரத்தை  விட்டுக்  கருதுமினோ  இத்தருணம் 
நீரத்தைச்  சேர்வீர்  நிஜம். 
44
வீணே  பராக்கில்  விடாதீர்  உமதுளத்தை 
நாணே  உடைய  நமரங்காள்  -  ஊணாகத் 
தெள்ளமுதம்  இன்றெனக்குச்  சேர்த்தளித்தான்  சித்தாட 
உள்ளியநாள்  ஈதறிமின்  உற்று. 
45
போற்றி  உரைக்கின்றேன்  பொய்என்  றிகழாதீர் 
நாற்றிசைக்கண்  வாழும்  நமரங்காள்  -  ஆற்றலருள் 
அப்பன்வரு  கின்றான்  அருள்விளையாட்  டாடுதற்கென் 
றிப்புவியில்  இத்தருணம்  இங்கு. 
46
ஆளுடையான்  நம்முடைய  அப்பன்  வருகின்ற 
நாள்எதுவோ  என்று  நலியாதீர்  -  நீள 
நினையாதீர்  சத்தியம்நான்  நேர்ந்துரைத்தேன்  இந்நாள் 
அனையான்  வருகின்றான்  ஆய்ந்து. 
47
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com