திருவருட்பா  117. ஞான மருந்து

ஞான  மருந்திம்  மருந்து  -  சுகம் 
நல்கிய  சிற்சபா  நாத  மருந்து. 
1
அருட்பெருஞ்  சோதி  மருந்து  -  என்னை 
ஐந்தொழில்  செய்தற்  களித்த  மருந்து 
பொருட்பெரும்  போக  மருந்து  -  என்னைப் 
புறத்தும்  அகத்தும்  புணர்ந்த  மருந்து.  ஞான 
2
எல்லாம்செய்  வல்ல  மருந்து  -  என்னுள் 
என்றும்  விடாமல்  இனிக்கு  மருந்து 
சொல்லால்  அளவா  மருந்து  -  சுயஞ் 
ஜோதி  அருட்பெருஞ்  ஜோதி  மருந்து.  ஞான 
3
காணாது  காட்டு  மருந்து  -  என்றன் 
கையிற்பொற்  கங்கணம்  கட்டு  மருந்து 
ஆணாகிப்  பெண்ணாம்  மருந்து  -  அது 
வாகி  மணிமன்றில்  ஆடு  மருந்து.  ஞான 
4
சுத்தசன்  மார்க்க  மருந்து  -  அருட் 
சோதி  மலையில்  துலங்கு  மருந்து 
சித்துரு  வான  மருந்து  -  என்னைச் 
சித்தெலாம்  செய்யச்செய்  வித்த  மருந்து.  ஞான 
5
அன்பர்க்  கெளிய  மருந்து  -  மற்றை 
ஐவர்க்கும்  காண்டற்  கரிய  மருந்து 
என்பற்றில்  ஓங்கு  மருந்து  -  என்னை 
இன்ப  நிலையில்  இருத்து  மருந்து.  ஞான 
6
நாதாந்த  நாட்டு  மருந்து  -  பர 
ஞான  வெளியில்  நடிக்கு  மருந்து 
போதாந்தர்க்  கெய்து  மருந்து  -  என்னுள் 
பொன்னடி  காட்டிப்  புணர்ந்த  மருந்து.  ஞான 
7
ஆதி  அனாதி  மருந்து  -  திரு 
அம்பலத்  தேநட  மாடு  மருந்து 
ஜோதி  மயமா  மருந்து  -  என்னைச் 
சோதியா  தாண்ட  துரிய  மருந்து.  ஞான 
8
ஆறந்தத்  தோங்கு  மருந்து  -  அதற் 
கப்பாலுக்  கப்பாலும்  ஆன  மருந்து 
ஊறந்த  மில்லா  மருந்து  -  எனக் 
குள்ளே  கலந்த  உறவா  மருந்து.  ஞான 
9
என்னுயிர்க்  கன்பா  மருந்து  -  கலந் 
தென்னுயிர்க்  குள்ளே  இருந்த  மருந்து 
என்னுயிர்  காக்கு  மருந்து  -  என்றும் 
என்னுயி  ராகிய  இன்ப  மருந்து.  ஞான 
10
என்னறி  வுட்கொள்  மருந்து  -  என்றும் 
என்னறி  வாகி  இலங்கு  மருந்து 
என்னறி  வின்ப  மருந்து  -  என்னுள் 
என்னறி  வுக்கறி  வென்னு  மருந்து.  ஞான 
11
என்குரு  வான  மருந்து  -  என்றும் 
என்தெய்வ  மாகி  இருக்கு  மருந்து 
என்அன்னை  யென்னு  மருந்து  -  என்றும் 
என்தந்தை  யாகிய  இன்ப  மருந்து.  ஞான 
12
என்பெரு  வாழ்வா  மருந்து  -  என்றும் 
என்செல்வ  மாகி  இருக்கு  மருந்து 
என்னுயிர்  நட்பா  மருந்து  -  எனக் 
கெட்டெட்டுச்  சித்தியும்  ஈந்த  மருந்து.  ஞான 
13
என்னிறை  யான  மருந்து  -  மகிழ்ந் 
தெனக்குத்தன்  பொன்மேனி  ஈந்த  மருந்து 
தன்னறி  வாகு  மருந்து  -  என்னைத் 
தந்த  மருந்தென்றன்  சொந்த  மருந்து.  ஞான 
14
உள்ளத்தி  னுள்ளா  மருந்து  -  என்றன் 
உயிருக்  கனாதி  உறவா  மருந்து 
தெள்ளத்  தெளிக்கு  மருந்து  -  என்னைச் 
சிவமாக்கிக்  கொண்ட  சிவாய  மருந்து.  ஞான 
15
மெய்ப்பொரு  ளென்னு  மருந்து  -  எல்லா 
வேதா  கமத்தும்  விளங்கு  மருந்து 
கைப்பொரு  ளான  மருந்து  -  மூன்று 
கண்கொண்ட  என்னிரு  கண்ணுள்  மருந்து.  ஞான 
16
மதியில்  விளைந்த  மருந்து  -  யார்க்கும் 
மதிக்கப்ப  டாதபொன்  வண்ண  மருந்து 
கதிதரும்  இன்ப  மருந்து  -  அருட் 
கண்ணால்என்  றன்னைக்  கலந்த  மருந்து.  ஞான 
17
கற்பூர  ஜோதி  மருந்து  -  பசுங் 
கற்பூர  நன்மணங்  காட்டு  மருந்து 
பொற்பூவின்  ஓங்கு  மருந்து  -  என்தற் 
போதம்  தவிர்த்தசிற்  போத  மருந்து.  ஞான 
18
மேலை  வெளியா  மருந்து  -  நான் 
வேண்டுந்தோ  றெல்லாம்  விளையு  மருந்து 
சாலை  விளக்கு  மருந்து  -  சுத்த 
சமரச  சன்மார்க்க  சங்க  மருந்து.  ஞான 
19
என்னைத்தா  னாக்கு  மருந்து  -  இங்கே 
இறந்தாரை  எல்லாம்  எழுப்பு  மருந்து 
துன்னுமெய்ச்  சோதி  மருந்து  -  அருட் 
சோதியால்  என்னைத்  துலக்கு  மருந்து.  ஞான 
20
பொய்யர்க்  கரிதா  மருந்து  -  என்னைப் 
புறத்தும்  அகத்தும்  புணர்ந்த  மருந்து 
கையிற்  கிடைத்த  மருந்து  -  சிவ 
காமக்  கொடியைக்  கலந்த  மருந்து.  ஞான 
21
ஆணவம்  தீர்க்கு  மருந்து  -  பர 
மானந்தத்  தாண்டவ  மாடும்  மருந்து 
மாணவ  வண்ண  மருந்து  -  என்னை 
வலிய  அழைத்து  வளர்க்கு  மருந்து.  ஞான 
22
வானடு  வான  மருந்து  -  என்னை 
மாமணி  மேடைமேல்  வைத்த  மருந்து 
ஊனம்  தவிர்த்த  மருந்து  -  கலந் 
துள்ளே  இனிக்கின்ற  உண்மை  மருந்து.  ஞான 
23
மலையிலக்  கான  மருந்து  -  என்றன் 
மறைப்பைத்  தவிர்த்தமெய்  வாழ்க்கை  மருந்து 
கலைநலம்  காட்டு  மருந்து  -  எங்கும் 
கண்ணாகிக்  காணும்  கனத்த  மருந்து.  ஞான 
24
அற்புத  ஜோதி  மருந்து  -  எல்லாம் 
ஆகியன்  றாகி  அமர்ந்த  மருந்து 
தற்பதம்  தந்த  மருந்து  -  எங்கும் 
தானேதா  னாகித்  தனித்த  மருந்து.  ஞான 
25
தன்னை  அளித்த  மருந்து  -  என்றும் 
சாகாத  நல்வரம்  தந்த  மருந்து 
பொன்னடி  ஈந்த  மருந்து  -  அருட் 
போனகம்  தந்த  புனித  மருந்து.  ஞான 
26
கண்ணுக்  கினிய  மருந்து  -  என்றன் 
கைப்பொரு  ளாந்தங்கக்  கட்டி  மருந்து 
எண்ணுக்  கடங்கா  மருந்து  -  என்னை 
ஏதக்குழிவிட்  டெடுத்த  மருந்து.  ஞான 
27
சுட்டப்  படாத  மருந்து  -  என்றன் 
தூக்கமும்  சோர்வும்  தொலைத்த  மருந்து 
எட்டுதற்  கொண்ணா  மருந்து  -  நான் 
எட்டிப்  பிடிக்க  இசைந்த  மருந்து.  ஞான 
28
உன்னற்  கரிதா  மருந்து  -  எனக் 
குள்ளும்  புறத்தும்  உலாவு  மருந்து 
தன்னந்  தனித்த  மருந்து  -  சுத்தச் 
சாக்கிரா  தீதச்  சபேச  மருந்து.  ஞான 
29
ஒன்றில்ஒன்  றான  மருந்து  -  அந்த 
ஒன்றில்  இரண்டாகி  ஓங்கு  மருந்து 
அன்றிமூன்  றான  மருந்து  -  நான் 
காகிஐந்  தாகி  அமர்ந்த  மருந்து.  ஞான 
30
வெளிக்குள்  வெளியா  மருந்து  -  எல்லா 
வெளியும்  கடந்து  விளங்கு  மருந்து 
ஒளிக்குள்  ஒளியா  மருந்து  -  எல்லா 
ஒளியும்தா  னாகிய  உண்மை  மருந்து.  ஞான 
31
ஆறாறுக்  கப்பால்  மருந்து  -  அதற் 
கப்புறத்  தீராறுக்  கப்பால்  மருந்து 
ஈறாதி  இல்லா  மருந்து  -  என்னை 
எல்லாம்  செயச்செய்த  இன்ப  மருந்து.  ஞான 
32
ஆரணத்  தோங்கு  மருந்து  -  அருள் 
ஆகம  மாகிஅண்  ணிக்கு  மருந்து 
காரணம்  காட்டு  மருந்து  -  எல்லாம் 
கண்ட  மருந்தென்னுள்  கொண்ட  மருந்து.  ஞான 
33
மலமைந்து  நீக்கு  மருந்து  -  புவி 
வானண்ட  மெல்லாம்  வளர்க்கு  மருந்து 
நலமிக்  கருளு  மருந்து  -  தானே 
நானாகித்  தானாளு  நாட்டு  மருந்து.  ஞான 
34
ஞான  மருந்திம்  மருந்து  -  சுகம் 
நல்கிய  சிற்சபா  நாத  மருந்து. 
35
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com