
தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள்திருச்செவிக்கிதுவே.
இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
காவிநேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந் தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
உறைமுடி வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ.
ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ அறிவாய்.
கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.



