திருவருட்பா  32. அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர்

காரண  காரியக்  கல்விகள்  எல்லாம் 
கற்பித்தென்  னுள்ளே  கலந்துகொண்  டென்னை 
நாரணர்  நான்முகர்  போற்றமேல்  ஏற்றி 
நாதாந்த  நாட்டுக்கோர்  நாயகன்  ஆக்கிப் 
பூரண  மாம்இன்பம்  பொங்கித்  ததும்பப் 
புத்தமு  தாம்அருட்  போனகம்  தந்தே 
ஆரண  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
1
தேகம்எப்  போதும்  சிதையாத  வண்ணம் 
செய்வித்  தெலாம்வல்ல  சித்தியும்  தந்தே 
போகம்எல்  லாம்என்றன்  போகம  தாக்கிப் 
போதாந்த  நாட்டைப்  புரக்கமேல்  ஏற்றி 
ஏகசி  வானந்த  வாழ்க்கையில்  என்றும் 
இன்புற்று  வாழும்  இயல்பளித்  தென்னை 
ஆகம  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
2
தானந்தம்  இல்லாத  தன்மையைக்  காட்டும் 
சாகாத  கல்வியைத்  தந்தெனக்  குள்ளே 
தேனந்தத்  தெள்ளமு  தூற்றிப்  பெருக்கித் 
தித்தித்துச்  சித்தம்  சிவமய  மாக்கி 
வானந்தம்  ஆதியும்  கண்டுகொண்  டழியா 
வாழ்க்கையில்  இன்புற்றுச்  சுத்தவே  தாந்த 
ஆனந்த  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
3
சிற்சபை  இன்பத்  திருநடங்  காட்டித் 
தெள்ளமு  தூட்டிஎன்  சிந்தையைத்  தேற்றிப் 
பொற்சபை  தன்னில்  பொருத்திஎல்  லாம்செய் 
பூரண  சித்திமெய்ப்  போகமும்  தந்தே 
தற்பர  மாம்ஓர்  சதானந்த  நாட்டில் 
சத்தியன்  ஆக்கிஓர்  சுத்தசித்  தாந்த 
அற்புத  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
4
தத்துவம்  எல்லாம்என்  தன்வசம்  ஆக்கிச் 
சாகாவ  ரத்தையும்  தந்தெனைத்  தேற்றி 
ஒத்துவந்  துள்ளே  கலந்துகொண்  டெல்லா 
உலகமும்  போற்ற  உயர்நிலை  ஏற்றிச் 
சித்திஎ  லாம்செயச்  செய்வித்துச்  சத்தும் 
சித்தும்  வெளிப்படச்  சுத்தநா  தாந்த 
அத்திரு  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
5
இத்தனை  என்றுநின்  றெண்ணிடல்  ஒண்ணா 
என்பிழை  யாவையும்  அன்பினில்  கொண்டே 
சத்திய  மாம்சிவ  சித்தியை  என்பால் 
தந்தெனை  யாவரும்  வந்தனை  செயவே 
நித்தியன்  ஆக்கிமெய்ச்  சுத்தசன்  மார்க்க 
நீதியை  ஓதிஓர்  சுத்தபோ  தாந்த 
அத்தனி  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
6
மருந்திது  மணிஇது  மந்திரம்  இதுசெய் 
வகைஇது  துறைஇது  வழிஇது  எனவே 
இருந்தெனுள்  அறிவித்துத்  தெள்ளமு  தளித்தே 
என்னையும்  தன்னையும்  ஏகம  தாக்கிப் 
பொருந்திஎ  லாஞ்செய  வல்லஓர்  சித்திப் 
புண்ணிய  வாழ்க்கையில்  நண்ணியோ  காந்த 
அருந்தவ  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
7
பதிசார  வைத்துமுற்  பசுநிலை  காட்டிப் 
பாசவி  மோசனப்  பக்குவன்  ஆக்கி 
நிதிசார  நான்  இந்த  நீள்உல  கத்தே 
நினைத்தன  நினைத்தன  நேருறப்  புரிந்து 
திதிசேர  மன்னுயிர்க்  கின்பஞ்செய்  கின்ற 
சித்திஎ  லாந்தந்து  சுத்தக  லாந்த 
அதிகார  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
8
இருளான  மலம்அறுத்  திகபரங்  கண்டே 
எல்லா  உயிர்களும்  இன்புற்று  வாழ 
மருளான  பற்பல  மார்க்கங்கள்  எல்லாம் 
வழிதுறை  தெரியாமல்  மண்மூடிப்  போகத் 
தெருளான  சுத்தசன்  மார்க்கம  தொன்றே 
சிறந்து  விளங்கஓர்  சிற்சபை  காட்டும் 
அருளான  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
9
இருட்சாதித்  தத்துவச்  சாத்திரக்  குப்பை 
இருவாய்ப்புப்  புன்செயில்  எருவாக்கிப்  போட்டு 
மருட்சாதி  சமயங்கள்  மதங்களாச்  சிரம 
வழக்கெலாம்  குழிக்கொட்டி  மண்மூடிப்  போட்டுத் 
தெருட்சாருஞ்  சுத்தசன்  மார்க்கநன்  னீதி 
சிறந்து  விளங்கஓர்  சிற்சபை  காட்டும் 
அருட்சோதி  வீதியில்  ஆடச்செய்  தீரே 
அருட்பெருஞ்  ஜோதிஎன்  ஆண்டவர்  நீரே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com