
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண் ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
கோவேஎன் கணவாஎன் குரவாஎன் குணவா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.



