திருவருட்பா  61. செய்பணி வினவல்

அருளே  பழுத்த  சிவதருவில்  அளிந்த  பழந்தந்  தடியேனைத் 
தெருளே  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
மருளே  முதலாம்  தடைஎல்லாம்  தீர்ந்தேன்  நின்பால்  வளர்கின்றேன் 
பொருளே  இனிநின்  தனைப்பாடி  ஆடும்  வண்ணம்  புகலுகவே. 
1
ஒருவா  தடியேன்  எண்ணியவா  றெல்லாம்  அருளி  உளங்களித்தே 
திருவார்  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
பெருவாழ்  வடைந்தேன்  பெருங்களிப்பால்  பெருமான்  நின்பால்  வளர்கின்றேன் 
உருவார்  உலகில்  உனைப்பாடி  ஆடும்  வண்ணம்  உரைத்தருளே. 
2
அவமே  புரிந்தேன்  தனைமீட்டுன்  அருளா  ரமுதம்  மிகப்புகட்டிச் 
சிவமே  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
பவமே  தொலைத்தேன்  பெருங்களிப்பால்  பதியே  நின்பால்  வளர்கின்றேன் 
நவமே  அடியேன்  நினைப்பாடி  ஆடும்  வண்ணம்  நவிலுகவே. 
3
பல்வா  தனையும்  தவிர்த்தெனக்கே  பரமா  னந்த  அமுதளித்துச் 
செல்வா  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
வல்வா  தனைசெய்  மனச்செருக்கை  மாற்றி  நின்பால்  வளர்கின்றேன் 
நல்வாழ்  வளித்தாய்  நினைப்பாடி  ஆடும்  வண்ணம்  நவிலுகவே. 
4
ஓவா  இன்ப  மயமாகி  ஓங்கும்  அமுதம்  உதவிஎனைத் 
தேவா  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
பூவார்  மணம்போல்  சுகந்தருமெய்ப்  பொருளே  நின்பால்  வளர்கின்றேன் 
நாவால்  அடியேன்  நினைப்பாடி  ஆடும்  வண்ணம்  நவிலுகவே. 
5
இளிவே  தவிர்த்துச்  சிறியேன்தன்  எண்ணம்  முழுதும்  அளித்தருளித் 
தெளிவே  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
ஒளிவேய்  வடிவு  பெற்றோங்கி  உடையாய்  உன்பால்  வளர்கின்றேன் 
தளிவேய்  நினது  புகழ்பாடி  ஆடும்  வண்ணம்  சாற்றுகவே. 
6
மறப்பே  தவிர்த்திங்  கெனைஎன்றும்  மாளா  நிலையில்  தனியமர்த்திச் 
சிறப்பே  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
பிறப்பே  தவிர்ந்தேன்  பெருங்களிப்பால்  பெருமான்  நின்பால்  வளர்கின்றேன் 
திறப்பேர்  உலகில்  உனைப்பாடி  ஆடும்  வண்ணம்  செப்புகவே. 
7
ஊனே  புகுந்தென்  உளங்கனிவித்  துயிரில்  கலந்தே  ஒன்றாகித் 
தேனே  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
நானே  அழியா  வாழ்வுடையேன்  நானே  நின்பால்  வளர்கின்றேன் 
தானேர்  உலகில்  உனைப்பாடி  ஆடும்  வண்ணம்  சாற்றுகவே. 
8
ஆரா  அமுதம்  அளித்தருளி  அன்பால்  இன்ப  நிலைக்கேற்றிச் 
சீரார்  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
ஏரார்  இன்ப  அனுபவங்கள்  எல்லாம்  பொருந்தி  இருக்கின்றேன் 
தீரா  உலகில்  அடிச்சிறியேன்  செய்யும்  பணியைத்  தெரித்தருளே. 
9
மெய்வைப்  பழியா  நிலைக்கேற்றி  விளங்கும்  அமுதம்  மிகஅளித்தே 
தெய்வப்  பதியே  சிவமேநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
ஐவைப்  பறிந்தேன்  துரிசெல்லாம்  அறுத்தேன்  நின்பால்  வளர்கின்றேன் 
பொய்வைப்  படையேன்  இவ்வுலகில்  புரியும்  பணியைப்  புகன்றருளே. 
10
...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ... 
...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ...  ... 
நாரா  யணனு  நான்முகனு  நயந்து  வியக்க  நிற்கின்றேன் 
ஏரார்  உலகில்  இனிஅடியேன்  செய்யும்  பணியை  இயம்புகவே. 
11
பிறந்தேற்  கென்றும்  இறவாது  பிறவா  தோங்கும்  பெருமைதந்து 
சிறந்தே  சிற்றம்  பலவாநின்  செல்வப்  பிள்ளை  ஆக்கினையே 
திறந்தேர்  முனிவர்  தேவரெலாந்  தேர்ந்து  நயப்ப  நிற்கின்றேன் 
அறந்தேர்  உலகில்  இனிஅடியேன்  செய்யும்  பணியை  அருளகவே. 
12
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com