
இரவு விடிந்தது இணையடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.
திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
பலித்தது பூசையென்று உந்தீபற.
உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன்என்று உந்தீபற
சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.



