
அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
தொன்றதுநம் முள்ள முறைந்து.
சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
கோயி லமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும்
வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே - வாழ்க்கைமனை
நல்வாயி லெங்கு நவமணிக்குன் றோங்குதிரு
நெல்வாயி னின்றொளிரு நீளொளியே - செல்வாய்த்
தெழிப்பாலை வேலைத் திரையொலிபோ லார்க்குங்
கழிப்பாலை யின்பக் களிப்பே - விழிப்பாலன்
கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே - சொல்லுந்
தயேந்திர ருள்ளத் தடம்போ லிலங்கும்
மயேந்திரப் பள்ளியின்ப வாழ்வே - கயேந்திரனைக்
காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
வாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய
பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
கலிக்காமூர் மேவுங் கரும்பே - வலிக்காலில்
பாய்க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ்
சாய்க்காடு மேவுந் தடங்கடலே - வாய்க்கமையச்
சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
பல்லவ னீச்சரத்தெம் பாவனமே - நல்லவர்கள்
கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே - தண்காட்டிக்
கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்
சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே - பார்காட்
டுருகாவூ ரெல்லா மொளிநயக்க வோங்குங்
குருகாவூர் வெள்ளடையெங் கோவே - அருகாத
கார்காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
சீர்காழி ஞானத் திரவியமே - ஓர்காழிப்
பாலற்கா வன்று பசும்பொற்றா ளங்கொடுத்த
கோலக்கா மேவுங் கொடையாளா - கோலக்கா
உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் -கள்ளிருக்கும்
காவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்
கோவின் மருவுகண்ணார் கோயிலாய் - மாவின்
இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
கடைமுடியின் மேவுங் கருத்தா - கொடைமுடியா
நன்றியூ ரென்றிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவு நிலைமையனே - ஒன்றிக்
கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே
ஈடூரி லாதுயர்ந்த ஏதுவினா லோங்குதிரு
நீடூ ரிலங்கு நிழற்றருவே - பீடுகொண்டு
மன்னியூ ரெல்லாம் வணங்க வளங்கொண்ட
அன்னியூர் மேவு மதிபதியே - மன்னர்சுக
வாழ்விக் குடிகளடி மண்பூச லாலென்னும்
வேழ்விக் குடியமர்ந்த வித்தகனே - சூழ்வுற்றோர்
விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே - நண்ணும்
வணஞ்சே ரிறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே - மணஞ்சேர்ந்துந்ன்
வாரட்ட கொங்கை மலையா ளொடுங்கொறுக்கை
வீரட்ட மேவும் வியனிறைவே - ஓரட்ட
திக்குங் கதிநாட்டிச் சீர்கொள்திருத் தொண்டருளம்
ஒக்குங் கருப்பறிய லூரரசே - மிக்கதிரு
மாவளருஞ் செந்தா மரைவளருஞ் செய்குரக்குக்
காவளரு மின்பக் கனசுகமே - தாவுமயல்
காழ்கொ ளிருமனத்துக் காரிருத் தோர்மருவும்
வாழ்கொளி புத்தூர் மணிச்சுடரே - தாழ்வகற்ற
நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே - விண்ணினிடை
வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த
வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும்
தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
நாரையூர் மேவு நடுநிலையே - பாரில்
உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே - தடம்பொழிலில்
கொந்தணவுங் கார்க்குழலார் கோலமயிற் போலுலவும்
பந்தண நல்லூர்ப் பசுபதியே - கந்தமலர்
அஞ்சனூர் செய்ததவத் தாலப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழுமென்றன் கண்மணியே - அஞ்சுகங்கள்
நாடிக்கா வுள்ளே நமச்சிவா யம்புகலும்
கோடிக்கா மேவுங் குளிர்மதியே - ஓடிக்
கருமங்க லக்குடியிற் காண்டுமென வோதும்
திருமங்க லக்குடியில் தேனே - தரும
மனந்தாள் மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளிற் பாலுகந்த பாகே - தினந்தாளிற்
சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே - ஏழ்புவிக்குள்
வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே - வாஞ்சையுறும்
சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே - ஓவில்
மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
வியலூர் சிவானந்த வெற்பே - அயலாம்பல்
மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
கொட்டையூ ருட்கிளருங் கோமளமே - இட்டமுடன்
என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு
மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
ஏற்கும் புறம்பியம்வாழ் என்னுயிரே - மாற்கருவின்
கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில்
வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்



