திருவருட்பா  3. நெஞ்சறிவுறுத்தல்

சீர்சான்ற  முக்கட்  சிவகளிற்றைச்  சேர்ந்திடிலாம் 
பேர்சான்ற  இன்பம்  பெரிது. 
1
ஆறு  முகத்தான்  அருளடையின்  ஆம்எல்லாப் 
பேறு  மிகத்தான்  பெரிது. 
2
பொன்னார்  மலைபோல்  பொலிவுற்  றசையாமல் 
எந்நாளும்  வாழியநீ  என்னெஞ்சே  -  பின்னான 
3
இப்பிறப்பி  னோடிங்  கெழுபிறப்பும்  அன்றியெனை 
எப்பிறப்பும்  விட்டகலா  என்னெஞ்சே  -  செப்பமுடன் 
4
செவ்வொருசார்  நின்று  சிறியேன்  கிளக்கின்ற 
இவ்வொருசொல்  கேட்டிடுக  என்னெஞ்சே  -  எவ்வெவ் 
5
உலகும்  பரவும்  ஒருமுதலாய்  எங்கும் 
இலகும்  சிவமாய்  இறையாய்  -  விலகும் 
6
உருவாய்  உருவில்  உருவாய்  உருவுள் 
அருவாய்  அருவில்  அருவாய்  -  உருஅருவாய் 
7
நித்தியமாய்  நிர்க்குணமாய்  நிற்சலமாய்  நின்மலமாய்ச் 
சத்தியமாய்ச்  சத்துவமாய்த்  தத்துவமாய்  -  முத்தியருள் 
8
ஒன்றாய்ப்  பலவாய்  உயிராய்  உயிர்க்குயிராய் 
நன்றாய்  நவமாய்  நடுநிலையாய்  -  நின்றோங்கும் 
9
வேதமாய்  வேதாந்த  வித்தாய்  விளங்குபர 
நாதமாய்  நாதாந்த  நாயகமாய்  -  ஓதும் 
10
செறிவாய்த்  திரமாய்ச்  சிதாகாச  மாய்ச்சொல் 
அறிவாய்  அறிவுள்  அறிவாய்  -  நெறிமேவு 
11
காலமாய்க்  காலம்  கடந்த  கருத்தாய்நற் 
சீலமாய்ச்  சிற்பரமாய்ச்  சின்மயமாய்  -  ஞாலம் 
12
பொருந்தாப்  பொருளாய்ப்  பொருந்தும்  பொருளாய்ப் 
பெருந்தா  ரகம்சூழ்ந்த  பேறாய்த்  -  திருந்தாத 
13
போக்கும்  வரத்துமிலாப்  பூரணமாய்ப்  புண்ணியர்கள் 
நோக்கும்  திறத்தெழுந்த  நுண்ணுணர்வாய்  -  நீக்கமிலா 
14
ஆதியாய்  ஆதிநடு  அந்தமாய்  ஆங்ககன்ற 
சோதியாய்ச்  சோதியாச்  சொற்பயனாய்  -  நீதியாய் 
15
ஆங்கார  நீக்கும்  அகார  உகாரமதாய் 
ஓங்கார  மாய்அவற்றின்  உட்பொருளாய்ப்  -  பாங்கான 
16
சித்தமாய்ச்  சித்தாந்த  தேசாய்த்  திகம்பரமாய்ச் 
சத்தமாய்ச்  சுத்த  சதாநிலையாய்  -  வித்தமாய் 
17
அண்டமாய்  அண்டத்  தணுவாய்  அருளகண்டா 
கண்டமாய்  ஆனந்தா  காரமதாய்  -  அண்டத்தின் 
18
அப்பாலாய்  இப்பாலாய்  அண்மையாய்ச்  சேய்மையதாய் 
எப்பாலாய்  எப்பாலும்  இல்லதுமாய்ச்  -  செப்பாலும் 
19
நெஞ்சாலும்  காய  நிலையாலும்  அந்நிலைக்குள் 
அஞ்சாலுங்  காண்டற்  கரும்பதமாய்  -  எஞ்சாப் 
20
பரமாய்ப்  பகாப்பொருளாய்ப்  பாலாய்ச்  சுவையின் 
தரமாய்ப்  பரப்பிரமம்  தானாய்-வரமாய 
21
ஒன்பான்  வடிவாய்  ஒளியெண்  குணக்கடலாய் 
அன்பாய்  அகநிலையாய்  அற்புதமாய்  -  இன்பாய் 
22
அகமாய்ப்  புறமாய்  அகம்புறமாய்  நீங்கும் 
சகமாய்ச்  சகமாயை  தானாய்  -  சகமாயை 
23
இல்லாதாய்  என்றும்  இருப்பதாய்  யாதொன்றும் 
கொல்லாதார்க்  கின்பம்  கொடுப்பதாய்  -  எல்லார்க்கும் 
24
நண்ணுவதாய்  நண்ணாதாய்  நல்வினையாய்  அல்வினையாய் 
எண்ணுவதாய்  எண்ணின்  இயலாதாய்  -  எண்ணுகின்ற 
25
வானாய்  நிலனாய்  வளியாய்  அனலாய்நீர் 
தானாய்  வழிபடுநான்  தான்தானாய்  -  வானாதி 
26
ஒன்றிடத்தும்  ஒன்றாதாய்  ஒன்றுவதாய்  ஆனந்தம் 
மன்றிடத்தில்  என்றும்  வதிவதாய்  -  ஒன்றியதோர் 
27
ஐந்நிறமாய்  அந்நிறத்தின்  ஆமொளியாய்  அவ்வொளிக்குள் 
எந்நிறமும்  வேண்டா  இயனிறமாய்  -  முந்நிறத்தில் 
28
பூப்பதுவாய்க்  காப்பதுவாய்ப்  போக்குவதாய்த்  தேக்குவதாய் 
நீப்பதுவாய்த்  தன்னுள்  நிறுத்துவதாய்ப்  -  பூப்பதின்றி 
29
வாளா  திருப்பதுவாய்  வாதனா  தீதமாய் 
நீளாது  நீண்ட  நிலையினதாய்  -  மீளாப் 
30
பெரிதாய்ச்  சிறிதாய்ப்  பெரிதும்  சிறிதும் 
அரிதாய்  அரிதில்  அரிதாய்த்  -  துரிய 
31
வெளியாய்ப்  பரவெளியாய்  மேவுபர  விந்தின் 
ஒளியாய்ச்  சிவானந்த  ஊற்றாய்த்  -  தெளியாதி 
32
கற்பகமாய்க்  காணுஞ்சங்  கற்ப  விகற்பமாய் 
நிற்பதா  கார  நிருவிகற்பாய்ப்  -  பொற்புடைய 
33
முச்சுடராய்  முச்சுடர்க்கும்  முன்னொளியாய்ப்  பின்னொளியாய் 
எச்சுடரும்  போதா  இயற்சுடராய்  -  அச்சில் 
34
நிறைவாய்க்  குறைவாய்  நிறைகுறை  வில்லாதாய் 
மறைவாய்  வெளியாய்  மனுவாய்  -  மறையாத 
35
சச்சிதா  னந்தமதாய்த்  தன்னிகரொன்  றில்லாதாய் 
விச்சையால்  எல்லாம்  விரிப்பதுவாய்  -  மெச்சுகின்ற 
36
யோகமாய்  யோகியர்  யோகத்  தெழுந்தசிவ 
போகமாய்ப்  போகியாய்ப்  போகமருள்  -  ஏகமாய்க் 
37
கேவலமாய்ச்  சுத்த  சகலமாய்க்  கீழ்ச்சகல 
கேவலங்கள்  சற்றும்  கிடையாதாய்  -  மாவலத்தில் 
38
காட்சியாய்க்  காண்பானாய்க்  காணப்  படுபொருளாய்ச் 
சூட்சியாய்ச்  சூட்சியால்  தோய்வரிதாய்  -  மாட்சிபெறச் 
39
செய்பவனாய்ச்  செய்தொழிலாய்ச்  செய்பொருளாய்ச்  செய்தொழிலால் 
உய்பவனாய்  உய்விக்கும்  உத்தமனாய்  -  மொய்கொள் 
40
அதுவாய்  அவளாய்  அவனாய்  அவையும் 
கதுவாது  நின்ற  கணிப்பாய்க்  -  கதுவாமல் 
41
ஐயம்  திரிபோ  டறியாமை  விட்டகற்றிப் 
பொய்யென்ப  தொன்றும்  பொருந்தாராய்ச்  -  செய்யென்ற 
42
ஓர்வினையில்  இன்பமுமற்  றோர்வினையில்  துன்பமுமாம் 
சார்வினைவிட்  டோங்கும்  தகையினராய்ப்  -  பார்வினையில் 
43
ஓர்பால்  வெறுப்புமற்றை  ஓர்பால்  விருப்புமுறும் 
சார்பால்  மயங்காத்  தகையினராய்ச்  -  சார்பாய 
44
ஓரிடத்தில்  தண்மையுமற்  றோரிடத்தில்  வெஞ்சினமும் 
பாரிடத்தில்  கொள்ளாப்  பரிசினராய்  -  நீரிடத்தில் 
45
தண்மைநிக  ராதென்றும்  சாந்தம்  பழுத்துயர்ந்த 
ஒண்மையுடன்  ஒன்றை  உணர்ந்தவராய்  -  வெண்மையிலா 
46
ஒன்றும்  அறிவின்  உதயாதி  ஈறளவும் 
என்றும்  இரண்டென்ப  தில்லவராய்  -  மன்றவொளிர் 
47
அம்மூன்றி  னுள்ளே  அடுக்கிவரும்  ஒன்றகன்ற 
மும்மூன்றின்  மூன்றும்  முனிந்தவராய்த்  -  தம்மூன்றி 
48
வீடாது  நின்றும்  விரிந்தும்  விகற்பநடை 
நாடாது  நான்கும்  நசித்தவராய்  -  ஊடாக 
49
எஞ்சாமல்  அஞ்சின்  இடமாய்  நடமாடும் 
அஞ்சாதி  அஞ்சும்  அறுத்தவராய்  -  எஞ்சாமல் 
50
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com