
அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
காக்கக் கடனுனக்கே காண்.
ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
தண்ணார் மலரை மதிநதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
னண்ணா லொற்றி யிருந்தவரே யைய ரேநீர் யாரென்றே
னண்ணா ரிடத்து மம்பலத்து நடவா தவர்நா மென்றுசொலி
யெண்ணா தருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி
யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா
னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன்
கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
மன்றன் மணக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா
னின்றன் பொடுங்கை யேந்தனத்தை யேற்றோர் கலத்திற் கொளுமென்றே
னன்றன் புடையா யெண்கலத்தி னாங்கொண் டிடுவே மென்றுசொலி
யென்றன் முலையைத் தொடுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத
மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்
தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை
யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
அடுத்தார்க் கருளு மொற்றிநக ரைய ரிவர்தா மிகத்தாகங்
கடுத்தா மென்றார் கடிதடநீர் கண்டீ ரையங் கொளுமென்றேன்
கொடுத்தாய் கண்ட திலையையங் கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை
யெடுத்தாற் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ
திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் தீரென் றேனின் னடுநோக்காக்
குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் குடம்யா தென்றே னஃதறிதற்
கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
மணங்கே தகைவான் செயுமொற்றி வள்ளலிவரை வல்விரைவேன்
பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் பிணங்கா விடினு நென்னலென
வணங்கே நினக்கொன் றினிற்பாதி யதிலோர் பாதி யாகுமிதற்
கிணங்கேஞ் சிறிது மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ
திற்றென் றறிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரன்றியஃ
தெற்றென் றறிவா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்
குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்
களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ
திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே
னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா ருண்டோ நீண்டமலையென்றேன்
வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த மலைகா ணதனின் மம்முதல்சென்
றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
வயலா ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் வாய்திறவார்
செயலார் விரல்கண் முடக்கியடி சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
மயலா ருளத்தோ டென்னென்றேன் மறித்தோர் விரலா லென்னுடைய
வியலார் வடிவிற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச்
சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
வலந்தங் கியசீ ரொற்றிநகர் வள்ள லிவர்தாம் மௌனமொடு
கலந்திங் கிருந்த வண்டசத்தைக் காட்டி மூன்று விரனீட்டி
நலந்தங் குறப்பின் னடுமுடக்கி நண்ணு மிந்த நகத்தொடுவா
யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய்
மெச்சு மொருகாற் கரந்தொட்டு மீண்டு மிடற்றக் கரம்வைத்தார்
பிச்ச ரடிகேள் வேண்டுவது பேசீ ரென்றேன் றமைக்காட்டி
யிச்சை யெனையுங் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு
நின்றா ரிருகை யொலியிசைத்தார் நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார்
நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தா ரியாவு மையமென்றே
னின்றா மரைக்கை யேந்துகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனித ரிவரூ ரொற்றியதா
முன்னைத் தவத்தா லியாங்காண முன்னே நின்றார் முகமலர்ந்து
மின்னிற் பொலியுஞ் சடையீரென் வேண்டு மென்றே னுணச்செய்யா
ளின்னச் சினங்கா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான்
செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று
மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொலுமென்றேன்
பட்டுண் மருங்குற் பாவாய்நீ பரித்த தன்றே பாரென்றே
யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
பாற்றக் கணத்தா ரிவர்காட்டு ப் பள்ளித் தலைவ ரொற்றியினின்
றாற்றப் பசித்து வந்தாரா மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
யேற்றுக் கிடந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.



