திருவருட்பா  7. வடிவுடை மாணிக்க மாலை

சீர்கொண்ட  ஒற்றிப்  பதியுடை  யானிடம்  சேர்ந்தமணி 
வார்கொண்ட  கொங்கை  வடிவாம்  பிகைதன்  மலரடிக்குத் 
தார்கொண்ட  செந்தமிழ்ப்  பாமாலை  சாத்தத்  தமியனுக்கே 
ஏர்கொண்ட  நல்லருள்  ஈயும்  குணாலய  ஏரம்பனே. 
1
கடலமு  தேசெங்  கரும்பே  அருட்கற்ப  கக்கனியே 
உடல்உயி  ரேஉயிர்க்  குள்உணர்  வேஉணர்  வுள்ஒளியே 
அடல்விடை  யார்ஒற்றி  யார்இடங்  கொண்ட  அருமருந்தே 
மடலவிழ்  ஞான  மலரே  வடிவுடை  மாணிக்கமே. 
2
அணியே  அணிபெறும்  ஒற்றித்  தியாகர்தம்  அன்புறுசற் 
குணியேஎம்  வாழ்க்கைக்  குலதெய்வ  மேமலைக்  கோன்தவமே 
பணியேன்  பிழைபொறுத்  தாட்கொண்ட  தெய்வப்  பதிகொள்சிந்தா 
மணியேஎன்  கண்ணுண்  மணியே  வடிவுடை  மாணிக்கமே. 
3
மானேர்  விழிமலை  மானேஎம்  மானிடம்  வாழ்மயிலே 
கானேர்  அளகப்  பசுங்குயி  லேஅருட்  கட்கரும்பே 
தேனே  திருவொற்றி  மாநகர்  வாழும்  சிவசத்தியே 
வானே  கருணை  வடிவே  வடிவுடை  மாணிக்கமே. 
4
பொருளே  அடியர்  புகலிட  மேஒற்றிப்  பூரணன்தண் 
அருளேஎம்  ஆருயிர்க்  காந்துணை  யேவிண்  ணவர்புகழும் 
தெருளேமெய்ஞ்  ஞானத்  தெளிவே  மறைமுடிச்  செம்பொருளே 
மருளேத  நீக்கும்  ஒளியே  வடிவுடை  மாணிக்கமே. 
5
திருமாலும்  நான்முகத்  தேவுமுன்  னாள்மிகத்  தேடிமனத் 
தருமா  லுழக்க  அனலுரு  வாகி  அமர்ந்தருளும் 
பெருமான்எம்  மான்ஒற்றிப்  பெம்மான்கைம்  மான்கொளும்  பித்தன்மலை 
மருமான்  இடங்கொள்பெண்  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
6
உன்னேர்  அருள்தெய்வம்  காணேன்  மனத்தும்  உரைக்கப்படாப் 
பொன்னேஅப்  பொன்னற்  புதஒளி  யேமலர்ப்  பொன்வணங்கும் 
அன்னே  எம்ஆருயிர்க்  கோர்உயி  ரேஒற்றி  யம்பதிவாழ் 
மன்னே  ரிடம்வளர்  மின்னே  வடிவுடை  மாணிக்கமே. 
7
கண்ணேஅக்  கண்ணின்  மணியே  மணியில்  கலந்தொளிசெய் 
விண்ணே  வியன்ஒற்றி  யூர்அண்ணல்  வாமத்தில்  வீற்றிருக்கும் 
பெண்ணே  மலைபெறும்  பெண்மணி  யேதெய்வப்  பெண்ணமுதே 
மண்நேயம்  நீத்தவர்  வாழ்வே  வடிவுடை  மாணிக்கமே. 
8
மலையான்  தவஞ்செய்து  பெற்றமுத்  தேஒற்றி  வாழ்கனகச் 
சிலையான்  மணக்க  மணக்குந்தெய்  வீகத்  திருமலரே 
அலையான்  மலிகடல்  பள்ளிகொண்  டான்தொழும்  ஆரமுதே 
வலையான்  அருமை  மகளே  வடிவுடை  மாணிக்கமே. 
9
காமம்  படர்நெஞ்  சுடையோர்  கனவினும்  காணப்படாச் 
சேமம்  படர்செல்வப்  பொன்னே  மதுரச்  செழுங்கனியே 
தாமம்  படர்ஒற்றி  யூர்வாழ்  பவளத்  தனிமலையின் 
வாமம்  படர்பைங்  கொடியே  வடிவுடை  மாணிக்கமே. 
10
கோடா  அருட்குணக்  குன்றே  சிவத்தில்  குறிப்பிலரை 
நாடாத  ஆனந்த  நட்பேமெய்  யன்பர்  நயக்கும்  இன்பே 
பீடார்  திருவொற்றிப்  பெம்மான்  இடஞ்செய்  பெருந்தவமே 
வாடா  மணிமலர்க்  கொம்பே  வடிவுடை  மாணிக்கமே. 
11
நாலே  எனுமறை  அந்தங்கள்  இன்னமும்  நாடியெனைப் 
போலே  வருந்த  வெளிஒளி  யாய்ஒற்றிப்  புண்ணியர்தம் 
பாலே  இருந்த  நினைத்தங்கை  யாகப்  பகரப்பெற்ற 
மாலே  தவத்தில்  பெரியோன்  வடிவுடை  மாணிக்கமே. 
12
கங்கைகொண்  டோன்ஒற்றி  யூர்அண்ணல்  வாமம்  கலந்தருள்செய் 
நங்கைஎல்  லாஉல  குந்தந்த  நின்னைஅந்  நாரணற்குத் 
தங்கைஎன்  கோஅன்றித்  தாயர்என்  கோசொல்  தழைக்குமலை 
மங்கையங்  கோமள  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
13
சோலையிட்  டார்வயல்  ஊரொற்றி  வைத்துத்தன்  தொண்டரன்பின் 
வேலையிட்  டால்செயும்  பித்தனை  மெய்யிடை  மேவுகரித் 
தோலையிட்  டாடும்  தொழிலுடை  யோனைத்  துணிந்துமுன்னாள் 
மாலையிட்  டாய்இஃதென்னே  வடிவுடை  மாணிக்கமே. 
14
தனையாள்  பவரின்றி  நிற்கும்  பரமன்  தனிஅருளாய் 
வினையாள்  உயிர்மல  நீக்கிமெய்  வீட்டின்  விடுத்திடுநீ 
எனையாள்  அருளொற்றி  யூர்வா  ழவன்றன்  னிடத்துமொரு 
மனையாள்  எனநின்ற  தென்னே  வடிவுடை  மாணிக்கமே. 
15
பின்னீன்ற  பிள்ளையின்  மேலார்வம்  தாய்க்கெனப்  பேசுவர்நீ 
முன்னீன்ற  பிள்ளையின்  மேலாசை  யுள்ளவா  மொய்யசுரர் 
கொன்னீன்ற  போர்க்கிளம்  பிள்ளையை  ஏவக்  கொடுத்ததென்னே 
மன்னீன்ற  ஒற்றி  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
16
பையாளும்  அல்குல்  சுரர்மட  வார்கள்  பலருளும்இச் 
செய்யாளும்  வெண்ணிற  மெய்யாளும்  எத்தவம்  செய்தனரோ 
கையாளும்  நின்னடிக்  குற்றேவல்  செய்யக்  கடைக்கணித்தாய் 
மையாளும்  கண்ணொற்றி  வாழ்வே  வடிவுடை  மாணிக்கமே. 
17
இலையாற்று  நீமலர்க்  காலால்  பணிக்குங்குற்  றேவலெலாம் 
தலையால்  செயும்பெண்கள்  பல்லோரில்  பூமகள்  தன்னைத்தள்ளாய் 
நிலையால்  பெரியநின்  தொண்டர்தம்  பக்க  நிலாமையினான் 
மலையாற்  கருளொற்றி  வாழ்வே  வடிவுடை  மாணிக்கமே. 
18
கலைமக  ளோநின்  பணியைஅன்  போடும்  கடைப்பிடித்தாள் 
அலைமக  ளோஅன்  பொடுபிடித்  தாள்எற்  கறைதிகண்டாய் 
தலைமக  ளேஅருட்  டாயேசெவ்  வாய்க்கருந்  தாழ்குழற்பொன் 
மலைமக  ளேஒற்றி  வாழ்வே  வடிவுடை  மாணிக்கமே. 
19
பொன்னோடு  வாணிஎன்  போரிரு  வோரும்  பொருணற்கல்வி 
தன்னோ  டருளுந்  திறநின்குற்  றேவலைத்  தாங்கிநின்ற 
பின்னோ  அலததன்  முன்னோ  தெளிந்திடப்  பேசுகநீ 
மன்னோ  டெழிலொற்றி  யூர்வாழ்  வடிவுடை  மாணிக்கமே. 
20
காமட்  டலர்திரு  வொற்றிநின்  னாயகன்  கந்தைசுற்றி 
யேமட்  டரையொடு  நிற்பது  கண்டும்  இரங்கலர்போல் 
நீமட்டு  மேபட்  டுடுக்கின்  றனைஉன்றன்  நேயம்என்னோ 
மாமட்  டலர்குழல்  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
21
வீற்றார்நின்  றன்மணத்  தம்மியின்  மேல்சிறு  மெல்லனிச்சம் 
ஆற்றாநின்  சிற்றடிப்  போதினைத்  தூக்கிவைத்  தாரெனின்மால் 
ஏற்றார்  திருவொற்றி  யூரார்  களக்கறுப்  பேற்றவரே 
மாற்றா  இயல்கொண்  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
22
பொருப்புறு  நீலியென்  பார்நின்னை  மெய்அது  போலும்ஒற்றி 
விருப்புறு  நாயகன்  பாம்பா  பரணமும்  வெண்தலையும் 
நெருப்புறு  கையும்  கனல்மேனி  யும்கண்டு  நெஞ்சம்அஞ்சாய் 
மருப்புறு  கொங்கை  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
23
அனம்பொறுத்  தான்புகழ்  ஒற்றிநின்  நாயகன்  அங்குமிழித் 
தனம்பொறுத்  தாள்ஒரு  மாற்றாளைத்  தன்முடி  தன்னில்வைத்தே 
தினம்பொறுத்  தான்அது  கண்டும்  சினமின்றிச்  சேர்ந்தநின்போல் 
மனம்பொறுத்  தார்எவர்  கண்டாய்  வடிவுடை  மாணிக்கமே. 
24
ஒருரு  வாய்ஒற்றி  யூர்அமர்ந்  தார்நின்  னுடையவர்பெண் 
சீருரு  வாகுநின்  மாற்றாளை  நீதெளி  யாத்திறத்தில் 
நீருரு  வாக்கிச்  சுமந்தார்  அதனை  நினைந்திலையே 
வாருரு  வார்கொங்கை  நங்காய்  வடிவுடை  மாணிக்கமே. 
25
சார்ந்தேநின்  பால்ஒற்றி  யூர்வாழும்  நாயகர்  தாமகிழ்வு 
கூர்ந்தே  குலாவும்அக்  கொள்கையைக்  காணில்  கொதிப்பளென்று 
தேர்ந்தேஅக்  கங்கையைச்  செஞ்சடை  மேல்சிறை  செய்தனர்ஒண் 
வார்ந்தே  குழைகொள்  விழியாய்  வடிவுடை  மாணிக்கமே. 
26
நீயே  எனது  பிழைகுறிப்  பாயெனில்  நின்னடிமைப் 
பேயேன்  செயும்வண்ணம்  எவ்வண்ண  மோஎனைப்  பெற்றளிக்கும் 
தாயே  கருணைத்  தடங்கட  லேஒற்றிச்  சார்குமுத 
வாயேர்  சவுந்தர  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
27
முப்போதும்  அன்பர்கள்  வாழ்த்தொற்றி  யூர்எம்  முதல்வர்மகிழ் 
ஒப்போ  தருமலைப்  பெண்ணமு  தேஎன்று  வந்துநினை 
எப்போதும்  சிந்தித்  திடர்நீங்கி  வாழ  எனக்கருள்வாய் 
மைப்போ  தனையகண்  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
28
மீதலத்  தோர்களுள்  யார்வணங்  காதவர்  மேவுநடுப் 
பூதலத்  தோர்களுள்  யார்புக  ழாதவர்  போற்றிநிதம் 
பாதலத்  தோர்களுள்  யார்பணி  யாதவர்  பற்றிநின்றாள் 
மாதலத்  தோங்கொற்றி  வாழ்வே  வடிவுடை  மாணிக்கமே. 
29
சேய்க்குற்றம்  தாய்பொறுத்  தேடா  வருகெனச்  செப்புவள்இந் 
நாய்க்குற்றம்  நீபொறுத்  தாளுதல்  வேண்டும்  நவின்மதியின் 
தேய்க்குற்ற  மாற்றும்  திருவொற்றி  நாதர்தந்  தேவிஅன்பர் 
வாய்க்குற்றம்  நீக்கும்  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
30
செங்கம  லாசனன்  தேவிபொன்  நாணும்  திருமுதலோர் 
சங்கம  தாமிடற்  றோங்குபொன்  நாணும்  தலைகுனித்துத் 
துங்கமு  றாதுளம்  நாணத்  திருவொற்றித்  தோன்றல்புனை 
மங்கல  நாணுடை  யாளே  வடிவுடை  மாணிக்கமே. 
31
சேடா  ரியன்மணம்  வீசச்  செயன்மணம்  சேர்ந்துபொங்க 
ஏடார்  பொழிலொற்றி  யூரண்ணல்  நெஞ்சம்  இருந்துவக்க 
வீடா  இருளும்  முகிலும்பின்  னிட்டு  வெருவவைத்த 
வாடா  மலர்க்குழ  லாளே  வடிவுடை  மாணிக்கமே. 
32
புரநோக்கி  னால்பொடி  தேக்கிய  ஒற்றிப்  புனிதர்களக் 
கரநோக்கி  நல்லமு  தாக்கிநிற்  போற்றுங்  கருத்தினர்ஆ 
தரநோக்கி  உள்ளிருள்  நீக்கிமெய்ஞ்  ஞானத்  தனிச்சுகந்தான் 
வரநோக்கி  ஆள்விழி  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
33
உன்னும்  திருவொற்றி  யூருடை  யார்நெஞ்  சுவப்பஎழில் 
துன்னும்  உயிர்ப்பயிர்  எல்லாந்  தழைக்கச்  சுகக்கருணை 
என்னும்  திருவமு  தோயாமல்  ஊற்றி  எமதுளத்தின் 
மன்னும்  கடைக்கண்  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
34
வெள்ளம்  குளிரும்  சடைமுடி  யோன்ஒற்றி  வித்தகன்தன் 
உள்ளம்  குளிரமெய்  பூரிப்ப  ஆனந்தம்  ஊற்றெடுப்பத் 
தெள்ளம்  குளிர்இன்  அமுதே  அளிக்கும்செவ்  வாய்க்குமுத 
வள்ளம்  குளிர்முத்த  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
35
மாநந்த  மார்வயல்  காழிக்  கவுணியர்  மாமணிக்கன் 
றாநந்த  இன்னமு  தூற்றும்  திருமுலை  ஆரணங்கே 
காநந்த  வோங்கும்  எழிலொற்றி  யார்உட்  களித்தியலும் 
வாநந்  தருமிடை  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
36
வான்தேட  நான்கு  மறைதேட  மாலுடன்  வாரிசமே 
லான்தேட  மற்றை  அருந்தவர்  தேடஎன்  அன்பின்மையால் 
யான்தேட  என்னுளம்  சேர்ஒற்றி  யூர்எம்  இருநிதியே 
மான்தேடும்  வாட்கண்  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
37
முத்தேவர்  விண்ணன்  முதல்தேவர்  சித்தர்  முனிவர்மற்றை 
எத்தே  வருநின்  அடிநினை  வார்நினைக்  கின்றிலர்தாம் 
செத்தே  பிறக்கும்  சிறியர்அன்  றோஒற்றித்  தேவர்நற்றா 
மத்தேவர்  வாம  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
38
திருநாள்  நினைத்தொழும்  நன்னாள்  தொழாமல்  செலுத்தியநாள் 
கருநாள்  எனமறை  எல்லாம்  புகலும்  கருத்தறிந்தே 
ஒருநா  ளினுநின்  றனைமற  வார்அன்பர்  ஒற்றியில்வாழ் 
மருநாண்  மலர்க்குழல்  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
39
வாணாள்  அடைவர்  வறுமை  யுறார்நன்  மனைமக்கள்பொன் 
பூணாள்  இடம்புகழ்  போதம்  பெறுவர்பின்  புன்மைஒன்றும் 
காணார்நின்  நாமம்  கருதுகின்  றோர்ஒற்றிக்  கண்ணுதல்பால் 
மாணார்வம்  உற்ற  மயிலே  வடிவுடை  மாணிக்கமே. 
40
சீரறி  வாய்த்திரு  வொற்றிப்  பரம  சிவத்தைநினைப் 
போரறி  வாய்அவ்  அறிவாம்  வெளிக்கப்  புறத்துநின்றாய் 
யாரறி  வார்நின்னை  நாயேன்அறிவ  தழகுடைத்தே 
வாரெறி  பூண்முலை  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
41
போற்றிடு  வோர்தம்  பிழைஆ  யிரமும்  பொறுத்தருள்செய் 
வீற்றொளிர்  ஞான  விளக்கே  மரகத  மென்கரும்பே 
ஏற்றொளிர்  ஒற்றி  யிடத்தார்இடத்தில்  இலங்கும்உயர் 
மாற்றொளி  ரும்பசும்  பொன்னே  வடிவுடை  மாணிக்கமே. 
42
ஆசைஉள்  ளார்அயன்  மால்ஆதி  தேவர்கள்  யாரும்நின்  தாள் 
பூசையுள்  ளார்எனில்  எங்கே  உலகர்செய்  பூசைகொள்வார் 
தேசையுள்  ளார்ஒற்றி  யூருடை  யார்இடஞ்  சேர்மயிலே 
மாசையுள்  ளார்புகழ்  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
43
அண்டாரை  வென்றுல  காண்டுமெய்ஞ்  ஞானம்  அடைந்துவிண்ணில் 
பண்டாரை  சூழ்மதி  போலிருப்  போர்கள்நின்  பத்தர்பதம் 
கண்டாரைக்  கண்டவர்  அன்றோ  திருவொற்றிக்  கண்ணுதல்சேர் 
வண்டாரை  வேலன்ன  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
44
அடியார்  தொழுநின்  அடிப்பொடி  தான்சற்  றணியப்பெற்ற 
முடியால்  அடிக்குப்  பெருமைபெற்  றார்அம்  முகுந்தன்சந்தக் 
கடியார்  மலர்அயன்  முன்னோர்தென்  ஒற்றிக்  கடவுட்செம்பால் 
வடியாக்  கருணைக்  கடலே  வடிவுடை  மாணிக்கமே. 
45
ஓவா  தயன்முத  லோர்முடி  கோடி  உறழ்ந்துபடில் 
ஆவா  அனிச்சம்  பொறாமலர்ச்  சிற்றடி  ஆற்றுங்கொலோ 
காவாய்  இமயப்பொற்  பாவாய்  அருளொற்றிக்  காமர்வல்லி 
வாவா  எனும்அன்பர்  வாழ்வே  வடிவுடை  மாணிக்கமே. 
46
இட்டார்  மறைக்கும்  உபநிட  தத்திற்கும்  இன்னுஞ்சற்றும் 
எட்டாநின்  பொன்னடிப்  போதெளி  யேன்தலைக்  கெட்டுங்கொலோ 
கட்டார்  சடைமுடி  ஒற்றிஎம்  மான்நெஞ்ச  கத்தமர்ந்த 
மட்டார்  குழன்மட  மானே  வடிவுடை  மாணிக்கமே. 
47
வெளியாய்  வெளிக்குள்  வெறுவெளி  யாய்ச்சிவ  மேநிறைந்த 
ஒளியாய்  ஒளிக்குள்  ஒளியாம்  பரைநினை  ஒப்பவரார் 
எளியார்க்  கெளியர்  திருவொற்றி  யார்மெய்  இனிதுபரி 
மளியாநின்  றோங்கு  மருவே  வடிவுடை  மாணிக்கமே. 
48
விணங்காத  லன்பர்தம்  அன்பிற்கும்  நின்புல  விக்கும்அன்றி 
வணங்கா  மதிமுடி  எங்கள்  பிரான்ஒற்றி  வாணனும்நின் 
குணங்கா  தலித்துமெய்க்  கூறுதந்  தான்எனக்  கூறுவர்உன் 
மணங்கா  தலித்த  தறியார்  வடிவுடை  மாணிக்கமே. 
49
பன்னும்பல்  வேறண்டம்  எல்லாம்அவ்  அண்டப்  பரப்பினின்று 
துன்னும்  சராசரம்  யாவையும்  ஈன்றது  சூழ்ந்தும்உன்னை 
இன்னும்  இளந்தை  அழியாத  கன்னிகை  என்பதென்னே 
மன்னும்  சுகாநந்த  வாழ்வே  வடிவுடை  மாணிக்கமே. 
50
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com