திருவருட்பா  58. கைம்மாறின்மை

இழைஎலாம்  விளங்கும்  அம்மை  இடங்கொள்நின்  கருணை  என்னும் 
மழைஎலாம்  பொழிந்தென்  உள்ள  மயக்கெலாம்  தவிர்த்து  நான்செய் 
பிழைஎலாம்  பொறுத்த  உன்றன்  பெருமைக்கென்  புரிவேன்  அந்தோ 
உழைஎலாம்  இலங்குஞ்  சோதி  உயர்மணி  மன்று  ளானே. 
1
போதுதான்  வீணே  போக்கிப்  புலையனேன்  புரிந்த  பொல்லாத் 
தீதுதான்  பொறுத்த  உன்றன்  திருவருட்  பெருமைக்  கந்தோ 
ஏதுதான்  புரிவேன்  ஓகோ  என்என்று  புகழ்வேன்  ஞான 
மாதுதான்  இடங்கொண்  டோங்க  வயங்குமா  மன்று  ளானே. 
2
சிற்றறி  வுடையன்  ஆகித்  தினந்தொறும்  திரிந்து  நான்செய் 
குற்றமும்  குணமாக்  கொண்ட  குணப்பெருங்  குன்றே  என்னைப் 
பெற்றதா  யுடனுற்  றோங்கும்  பெருமநின்  பெருமை  தன்னைக் 
கற்றறி  வில்லேன்  எந்தக்  கணக்கறிந்  துரைப்பேன்  அந்தோ. 
3
மையரி  நெடுங்க  ணார்தம்  வாழ்க்கையின்  மயங்கி  இங்கே 
பொய்யறி  வுடையேன்  செய்த  புன்மைகள்  பொறுத்தாட்  கொண்டாய் 
ஐயறி  வுடையார்  போற்றும்  அம்பலத்  தரசே  நின்சீர் 
மெய்யறி  வறியேன்  எந்த  விளைவறிந்  துரைப்பேன்  அந்தோ. 
4
பேயினும்  பெரியேன்  செய்த  பிழைகளுக்  கெல்லை  இல்லை 
ஆயினும்  பொறுத்தாட்  கொண்டாய்  அம்பலத்  தரசே  என்றன் 
தாயினும்  இனிய  உன்றன்  தண்ணருட்  பெருமை  தன்னை 
நாயினுங்  கடையேன்  எந்த  நலமறிந்  துரைப்பேன்  அந்தோ. 
5
துரும்பினில்  சிறியேன்  வஞ்சம்  சூழ்ந்தநெஞ்  சகத்தேன்  செய்த 
பெரும்பிழை  அனைத்தும்  அந்தோ  பெருங்குண  மாகக்கொண்டாய் 
அரும்பொருள்  என்ன  வேதம்  ஆகமம்  வழுத்து  கின்ற 
கரும்பினில்  இனியாய்  உன்றன்  கருணைஎன்  னென்பேன்  அந்தோ. 
6
வரைகடந்  தடியேன்  செய்த  வன்பிழை  பொறுத்தாட்  கொண்டாய் 
திரைகடந்  தண்ட  பிண்டத்  திசைஎலாம்  கடந்தே  அப்பால் 
கரைகடந்  தோங்கும்  உன்றன்  கருணையங்  கடற்சீர்  உள்ளம் 
உரைகடந்  ததுஎன்  றால்யான்  உணர்வதென்  உரைப்ப  தென்னே. 
7
நனவினும்  பிழையே  செய்தேன்  நாயினும்  கடையேன்  அந்தோ 
கனவினும்  பிழையே  செய்தேன்  கருணைமா  நிதியே  நீதான் 
நினைவினும்  குறியா  தாண்டாய்  நின்னருட்  பெருமை  தன்னை 
வினைவினும்  சொல்வார்  காணேன்  என்செய்வேன்  வினைய  னேனே. 
8
வன்செயல்  பொறுத்தாட்  கொண்ட  வள்ளலே  அடிய  னேன்றன் 
முன்செயல்  அவைக  ளோடு  முடுகுபின்  செயல்கள்  எல்லாம் 
என்செயல்  ஆகக்  காணேன்  எனைக்கலந்  தொன்றாய்  நின்றோய் 
நின்செயல்  ஆகக்  கண்டேன்  கண்டபின்  நிகழ்த்தல்  என்னே. 
9
இருமையும்  ஒருமை  தன்னில்  ஈந்தனை  எந்தாய்  உன்றன் 
பெருமைஎன்  னென்று  நான்தான்  பேசுவேன்  பேதம்  இன்றி 
உரிமையால்  யானும்  நீயும்  ஒன்றெனக்  கலந்து  கொண்ட 
ஒருமையை  நினைக்கின்  றேன்என்  உள்ளகந்  தழைக்கின்  றேனே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com