திருவருட்பா  67. சிற்சத்தி துதி

சோதிக்  கொடியே  ஆனந்த  சொருபக்  கொடியே  சோதிஉருப் 
பாதிக்  கொடியே  சோதிவலப்  பாகக்  கொடியே  எனைஈன்ற 
ஆதிக்  கொடியே  உலகுகட்டி  ஆளுங்  கொடியே  சன்மார்க்க 
நீதிக்  கொடியே  சிவகாம  நிமலக்  கொடியே  அருளுகவே. 
1
பொருணற்  கொடியே  மாற்றுயர்ந்த  பொன்னங்  கொடியே  போதாந்த 
வருணக்  கொடியே  எல்லாஞ்செய்  வல்லார்  இடஞ்சேர்  மணிக்கொடியே 
தருணக்  கொடியே  என்தன்னைக்  தாங்கி  ஓங்குந்  தனிக்கொடியே 
கருணைக்  கொடியே  ஞானசிவ  காமக்  கொடியே  அருளுகவே. 
2
நீட்டுக்  கொடியே  சன்மார்க்க  நீதிக்  கொடியே  சிவகீதப் 
பாட்டுக்  கொடியே  இறைவர்வலப்  பாகக்  கொடியே  பரநாத 
நாட்டுக்  கொடியே  எனைஈன்ற  ஞானக்  கொடியே  என்னுறவாம் 
கூட்டுக்  கொடியே  சிவகாமக்  கொடியே  அடியேற்  கருளுகவே  . 
3
மாலக்  கொடியேன்  குற்றமெலாம்  மன்னித்  தருளி  மரணமெனும் 
சாலக்  கொடியை  ஒடித்தெனக்குட்  சார்ந்து  விளங்கும்  தவக்கொடியே 
காலக்  கருவைக்  கடந்தொளிர்வான்  கருவும்  கடந்து  வயங்குகின்ற 
கோலக்  கொடியே  சிவஞானக்  கொடியே  அடியேற்  கருளுகவே. 
4
நாடாக்  கொடிய  மனம்அடக்கி  நல்ல  மனத்தைக்  கனிவித்துப் 
பாடாப்  பிழையைப்  பொறுத்தெனக்கும்  பதம்ஈந்  தாண்ட  பதிக்கொடியே 
தேடாக்  கரும  சித்திஎலாம்  திகழத்  தயவால்  தெரிவித்த 
கோடாக்  கொடியே  சிவதருமக்  கொடியே  அடியேற்  கருளுகவே. 
5
மணங்கொள்  கொடிப்பூ  முதல்நான்கு  வகைப்பூ  வடிவுள்  வயங்குகின்ற 
வணங்கொள்  கொடியே  ஐம்பூவும்  மலிய  மலர்ந்த  வான்கொடியே 
கணங்கொள்  யோக  சித்திஎலாம்  காட்டுங்  கொடியே  கலங்காத 
குணங்கொள்  கொடியே  சிவபோகக்  கொடியே  அடியேற்  கருளுகவே. 
6
புலங்கொள்  கொடிய  மனம்போன  போக்கில்  போகா  தெனைமீட்டு 
நலங்கொள்  கருணைச்  சன்மார்க்க  நாட்டில்  விடுத்த  நற்கொடியே 
வலங்கொள்  ஞான  சித்திஎலாம்  வயங்க  விளங்கு  மணிமன்றில் 
குலங்கொள்  கொடியே  மெய்ஞ்ஞானக்  கொடியே  அடியேற்  கருளுகவே. 
7
வெறிக்கும்  சமயக்  குழியில்விழ  விரைந்தேன்  தன்னை  விழாதவகை 
மறிக்கும்  ஒருபே  ரறிவளித்த  வள்ளற்  கொடியே  மனக்கொடியைச் 
செறிக்கும்  பெரியர்  உளத்தோங்கும்  தெய்வக்  கொடியே  சிவஞானம் 
குறிக்கும்  கொடியே  ஆனந்தக்  கொடியே  அடியேற்  கருளுகவே. 
8
கடுத்த  விடர்வன்  பயம்கவலை  எல்லாம்  தவிர்த்துக்  கருத்துள்ளே 
அடுத்த  கொடியே  அருளமுதம்  அளித்தென்  தனைமெய்  அருட்கரத்தால் 
எடுத்த  கொடியே  சித்திஎலாம்  இந்தா  மகனே  என்றெனக்கே 
கொடுத்த  கொடியே  ஆனந்தக்  கொடியே  அடியேற்  கருளுகவே. 
9
ஏட்டைத்  தவிர்த்தென்  எண்ணமெலாம்  எய்த  ஒளிதந்  தியான்வனைந்த 
பாட்டைப்  புனைந்து  பரிசளித்த  பரம  ஞானப்  பதிக்கொடியே 
தேட்டைத்  தனிப்பேர்  அருட்செங்கோல்  செலுத்தும்சுத்த  சன்மார்க்கக் 
கோட்டைக்  கொடியே  ஆனந்தக்  கொடியே  அடியேற்  கருளுகவே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com