திருவருட்பா  69. ஆனந்தானுபவம்

கள்ளத்தை  எல்லாம்  கடக்கவிட்டேன்  நின்அருளாம் 
வெள்ளத்தை  எல்லாம்  மிகஉண்டேன்  -  உள்ளத்தே 
காணாத  காட்சிஎலாம்  காண்கின்றேன்  ஓங்குமன்ற 
வாணா  நினக்கடிமை  வாய்த்து. 
1
காலையிலே  நின்றன்னைக்  கண்டுகொண்டேன்  சன்மார்க்கச் 
சாலையிலே  இன்பம்  தழைக்கின்றேன்  -  ஞாலமிசைச் 
சாகா  வரம்பெற்றேன்  தத்துவத்தின்  மேல்நடிக்கும் 
ஏகா  நினக்கடிமை  ஏற்று. 
2
மூவர்களும்  செய்ய  முடியா  முடிபெல்லாம் 
யாவர்களுங்  காண  எனக்களித்தாய்  -  மேவுகடை 
நாய்க்குத்  தவிசளித்து  நன்முடியும்  சூட்டுதல்எந் 
தாய்க்குத்  தனிஇயற்கை  தான். 
3
கொள்ளைஎன  இன்பம்  கொடுத்தாய்  நினதுசெல்வப் 
பிள்ளைஎன  எற்குப்  பெயரிட்டாய்  -  தெள்ளமுதம் 
தந்தாய்  சமரசசன்  மார்க்கசங்கத்  தேவைத்தாய் 
எந்தாய்  கருணை  இது. 
4
கண்டேன்  களித்தேன்  கருணைத்  திருஅமுதம் 
உண்டேன்  உயர்நிலைமேல்  ஓங்குகின்றேன்  -  கொண்டேன் 
அழியாத்  திருஉருவம்  அச்சோஎஞ்  ஞான்றும் 
அழியாச்சிற்  றம்பலத்தே  யான். 
5
பார்த்தேன்  பணிந்தேன்  பழிச்சினேன்  மெய்ப்புளகம் 
போர்த்தேன்என்  உள்ளமெலாம்  பூரித்தேன்  -  ஆர்த்தேநின் 
றாடுகின்றேன்  பாடுகின்றேன்  அன்புருவா  னேன்அருளை 
நாடுகின்றேன்  சிற்சபையை  நான். 
6
எண்ணுகின்றேன்  எண்ணங்கள்  எல்லாம்  தருகின்றான் 
உண்ணுகின்றேன்  உண்ணஉண்ண  ஊட்டுகின்றான்  -  நண்ணுதிருச் 
சிற்றம்  பலத்தே  திருநடஞ்செய்  கின்றான்என் 
குற்றம்  பலபொறுத்துக்  கொண்டு. 
7
கொண்டான்  அடிமை  குறியான்  பிழைஒன்றும் 
கண்டான்  களித்தான்  கலந்திருந்தான்  -  பண்டாய 
நான்மறையும்  ஆகமமும்  நாடுந்  திருப்பொதுவில் 
வான்மயத்தான்  என்னை  மகிழ்ந்து. 
8
கண்டேன்  களித்தேன்  கருணைத்  திருஅமுதம் 
உண்டேன்  அழியா  உரம்  பெற்றேன்  -  பண்டே 
எனைஉவந்து  கொண்டான்  எழில்ஞான  மன்றம் 
தனைஉவந்து  கொண்டான்  தனை. 
9
தாதையாம்  என்னுடைய  தாயாம்என்  சற்குருவாம் 
மேதையாம்  இன்ப  விளைவுமாம்  -  ஓது 
குணவாளன்  தில்லைஅருட்  கூத்தன்  உமையாள் 
மணவாளன்  பாத  மலர். 
10
திருவாம்என்  தெய்வமாம்  தெள்ளமுத  ஞானக் 
குருவாம்  எனைக்காக்கும்  கோவாம்  -  பருவரையின் 
தேப்பிள்ளை  யாம்எம்  சிவகாம  வல்லிமகிழ் 
மாப்பிள்ளை  பாத  மலர். 
11
என்அறிவாம்  என்அறிவின்  இன்பமாம்  என்னறிவின் 
தன்அறிவாம்  உண்மைத்  தனிநிலையாம்  -  மன்னுகொடிச் 
சேலைஇட்டான்  வாழச்  சிவகாம  சுந்தரியை 
மாலைஇட்டான்  பாதமலர். 
12
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com