திருவருட்பா  83. அடிமைப் பேறு

அருள்அளித்தான்  அன்பளித்தான்  அம்பலத்தான்  உண்மைப் 
பொருள்அளித்தான்  என்னுட்  புணர்ந்தான்  -  தெருள்அளித்தான் 
எச்சோ  தனையும்  இயற்றாமல்  ஆண்டுகொண்டான் 
அச்சோ  எனக்கவன்போல்  ஆர். 
1
ஆரணமும்  ஆகமமும்  ஆங்காங்  குணர்த்துகின்ற 
காரணமும்  காரியமும்  காட்டுவித்தான்  -  பூரணன்சிற் 
றம்பலத்தான்  என்னாசை  அப்பன்  எலாவல்ல 
செம்பலத்தை  என்உளத்தே  சேர்த்து. 
2
சேர்த்தான்  பதம்என்  சிரத்தே  திருவருட்கண் 
பார்த்தான்என்  எண்ணமெலாம்  பாலித்தான்  -  தீர்த்தான்என் 
துன்பமெலாம்  தூக்கமெலாம்  சூழாது  நீக்கிவிட்டான் 
இன்பமெலாம்  தந்தான்  இசைந்து. 
3
இசைந்தான்என்  உள்ளத்  திருந்தான்  எனையும் 
நசைந்தான்என்  பாட்டை  நயந்தான்  -  அசைந்தாடு 
மாயை  மனம்அடக்கி  வைத்தான்  அருள்எனும்என் 
தாயைமகிழ்  அம்பலவன்  தான். 
4
தானே  அருள்ஆனான்  தானே  பொருள்ஆனான் 
தானேஎல்  லாம்வல்ல  தான்ஆனான்  -  தானேதான் 
நான்ஆனான்  என்னுடைய  நாயகன்ஆ  னான்ஞான 
வான்ஆனான்  அம்பலத்தெம்  மான். 
5
மான்முதலா  உள்ள  வழக்கெல்லாம்  தீர்த்தருளித் 
தான்முதலாய்  என்னுளமே  சார்ந்தமர்ந்தான்  -  தேன்முதலாத் 
தித்திக்கும்  பண்டமெலாம்  சேர்த்தாங்கென்  சிந்தைதனில் 
தித்திக்கும்  அம்பலத்தான்  தேர்ந்து. 
6
தேர்ந்தேன்  தெளிந்தேன்  சிவமே  பொருள்எனஉள் 
ஓர்ந்தேன்  அருளமுதம்  உண்கின்றேன்  -  சார்ந்தேன்சிற் 
றம்பலத்தில்  எல்லாம்வல்  லானை  அவன்அருளால் 
எம்பலத்தெல்  லாம்வலன்ஆ  னேன். 
7
ஆனேன்  அவனா  அவன்அருளால்  ஆங்காங்கு 
நானே  களித்து  நடிக்கின்றேன்  -  தானேஎன் 
தந்தைஎன்பால்  வைத்த  தயவைநினைக்  குந்தோறும் 
சிந்தைவியக்  கின்றேன்  தெரிந்து. 
8
தெரிந்தேன்  அருளால்  சிவம்ஒன்றே  என்று 
புரிந்தேன்  சிவம்பலிக்கும்  பூசை  -  விரிந்தமனச் 
சேட்டைஎலாம்  தீர்த்துவிட்டேன்  சித்தெல்லாம்  வல்லஅருள் 
நாட்டைஎலாம்  கைக்கொண்டேன்  நான். 
9
நான்செய்த  நற்றவந்தான்  யாதோ  நவிற்றரிது 
வான்செய்த  தேவரெலாம்  வந்தேவல்  -  தான்செய்து 
தம்பலம்என்  றேமதிக்கத்  தான்வந்தென்  னுட்கலந்தான் 
அம்பலவன்  தன்அருளி  னால். 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com