திருவருட்பா  88. பாமாலை ஏற்றல்

நான்புனைந்த  சொன்மாலை  நன்மாலை  என்றருளித் 
தான்புனைந்தான்  ஞான  சபைத்தலைவன்  -  தேன்புனைந்த 
சொல்லாள்  சிவகாம  சுந்தரியைத்  தோள்புணர்ந்த 
நல்லான்தன்  தாட்கே  நயந்து. 
1
சொல்லுகின்ற  என்சிறுவாய்ச்  சொன்மாலை  அத்தனையும் 
வெல்லுகின்ற  தும்பைஎன்றே  மேல்அணிந்தான்  -  வல்லிசிவ 
காம  சவுந்தரிக்குக்  கண்ணனையான்  ஞானசபைச் 
சேமநட  ராஜன்  தெரிந்து. 
2
ஏதாகு  மோஎனநான்  எண்ணி  இசைத்தஎலாம் 
வேதாக  மம்என்றே  மேல்அணிந்தான்  -  பாதார 
விந்தம்  எனதுசிர  மேல்அமர்த்தி  மெய்அளித்த 
எந்தைநட  ராஜன்  இசைந்து. 
3
இன்னுரைஅன்  றென்றுலகம்  எல்லாம்  அறிந்திடுக 
என்னுரையும்  பொன்னுரைஎன்  றேஅணிந்தான்  -  தன்னுரைக்கு 
நேர்என்றான்  நீடுலகில்  நின்போல்  உரைக்கவல்லார் 
ஆர்என்றான்  அம்பலவன்  ஆய்ந்து. 
4
என்பாட்டுக்  கெண்ணாத  தெண்ணி  இசைத்தேன்என் 
தன்பாட்டைச்  சத்தியமாத்  தான்புனைந்தான்  -  முன்பாட்டுக் 
காலையிலே  வந்து  கருணைஅளித்  தேதருமச் 
சாலையிலே  வாஎன்றான்  தான். 
5
என்னே  அதிசயம்ஈ  திவ்வுலகீர்  என்னுரையைப் 
பொன்னே  எனமேற்  புனைந்துகொண்டான்  -  தன்னேரில் 
நல்ஆ  ரணங்கள்எலாம்  நாணியவே  எல்லாஞ்செய் 
வல்லான்  திருக்கருணை  வாய்ப்பு. 
6
முன்பின்அறி  யாது  மொழிந்தமொழி  மாலைஎலாம் 
அன்பின்  இசைந்  தந்தோ  அணிந்துகொண்டான்  -  என்பருவம் 
பாராது  வந்தென்  பருவரல்எல்  லாம்தவிர்த்துத் 
தாரா  வரங்களெலாம்  தந்து. 
7
பொன்னொப்ப  தாம்ஒருநீ  போற்றியசொன்  மாலைஎன்றே 
என்னப்பன்  என்சொல்  இசைந்தணிந்தான்  -  தன்ஒப்பில் 
வல்லான்  இசைந்ததுவே  மாமாலை  அற்புதம்ஈ 
தெல்லாம்  திருவருட்சீ  ரே. 
8
பின்முன்அறி  யேன்நான்  பிதற்றியசொன்  மாலைஎலாம் 
தன்முன்அரங்  கேற்றெனவே  தான்உரைத்தான்  -  என்முன் 
இருந்தான்என்  னுள்ளே  இருக்கின்றான்  ஞான 
மருந்தான்சிற்  றம்பலத்தான்  வாய்ந்து. 
9
நீயேஎன்  பிள்ளைஇங்கு  நின்பாட்டில்  குற்றமொன்றும் 
ஆயேம்என்  றந்தோ  அணிந்துகொண்டான்  -  நாயேன்செய் 
புண்ணியம்இவ்  வானிற்  புவியின்  மிகப்பெரிதால் 
எண்ணியஎல்  லாம்புரிகின்  றேன். 
10
எண்ணுகின்றேன்  எண்ணுதொறென்  எண்ணமெலாம்  தித்திக்க 
நண்ணுகின்ற  தென்புகல்வேன்  நானிலத்தீர்  -  உண்ணுகின்ற 
உள்ளமுதோ  நான்தான்  உஞற்றுதவத்  தாற்கிடைத்த 
தெள்ளமுதோ  அம்பலவன்  சீர். 
11
ஆக்கி  அளித்தல்முத  லாந்தொழில்ஓர்  ஐந்தினையும் 
தேக்கி  அமுதொருநீ  செய்என்றான்  -  தூக்கி 
எடுத்தான்  அணைத்தான்  இறவாத  தேகம் 
கொடுத்தான்சிற்  றம்பலத்தென்  கோ. 
12
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com