திருவருட்பா  89. திருவருட் கொடை

சிருட்டிமுதல்  ஐந்தொழில்நான்  செய்யஎனக்  கருள்புரிந்தாய் 
பொருட்டிகழ்நின்  பெருங்கருணைப்  புனிதஅமு  துவந்தளித்தாய் 
தெருட்டிகழ்நின்  அடியவர்தம்  திருச்சபையின்  நடுஇருத்தித் 
தெருட்டிஎனை  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
1
படைத்தல்முதல்  ஐந்தொழில்செய்  பணிஎனக்கே  பணித்திட்டாய் 
உடைத்தனிப்பே  ரருட்சோதி  ஓங்கியதெள்  ளமுதளித்தாய் 
கொடைத்தனிப்போ  கங்கொடுத்தாய்  நின்அடியர்  குழுநடுவே 
திடத்தமர்த்தி  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
2
அயன்முதலோர்  ஐவர்செயும்  தொழில்எனக்கே  அளித்திட்டாய் 
உயர்வுறுபே  ரருட்சோதித்  திருவமுதம்  உவந்தளித்தாய் 
மயர்வறுநின்  அடியவர்தம்  சபைநடுவே  வைத்தருளிச் 
செயமுறவே  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
3
ஐவர்செயும்  தொழில்எனக்கே  அளித்தாய்நின்  அருளமுதென் 
கைவரச்செய்  துண்ணுவித்தாய்  கங்கணம்என்  கரத்தணிந்தாய் 
சைவர்எனும்  நின்னடியார்  சபைநடுவே  வைத்தருளித் 
தெய்வமென்று  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
4
முத்தொழிலோ  ஐந்தொழிலும்  முன்னிமகிழ்ந்  தெனக்களித்தாய் 
புத்தமுதம்  உண்ணுவித்தோர்  பொன்னணிஎன்  கரத்தணிந்தாய் 
சித்தர்எனும்  நின்னடியார்  திருச்சபையில்  நடுஇருத்திச் 
சித்துருவின்  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
5
ஐந்தொழில்நான்  செயப்பணித்தாய்  அருளமுதம்  உணவளித்தாய் 
வெந்தொழில்தீர்ந்  தோங்கியநின்  மெய்யடியார்  சபைநடுவே 
எந்தைஉனைப்  பாடிமகிழ்ந்  தின்புறவே  வைத்தருளிச் 
செந்தமிழின்  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
6
நான்முகன்நா  ரணன்முதலாம்  ஐவர்தொழில்  நயந்தளித்தாய் 
மேன்மைபெறும்  அருட்சோதித்  திருவமுதும்  வியந்தளித்தாய் 
பான்மையுறு  நின்னடியார்  சபைநடுவே  பதித்தருளித் 
தேன்மையொடு  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
7
நாயெனவே  திரிந்தேனை  வலிந்தழைத்து  நான்முகன்மால் 
தூயபெருந்  தேவர்செயும்  தொழில்புரியென்  றமுதளித்தாய் 
நாயகநின்  னடியர்சபை  நடுவிருக்க  வைத்தருளிச் 
சேயெனவே  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
8
புல்வழங்கு  புழுஅதனில்  சிறியேனைப்  புணர்ந்தருளிச் 
சொல்வழங்கு  தொழில்ஐந்தும்  துணிந்துகொடுத்  தமுதளித்தாய் 
கல்விபெறு  நின்னடியர்  கழகநடு  வைத்தென்னைச் 
செல்வமொடு  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
9
தெருமனைதோ  றலைந்தேனை  அலையாமே  சேர்த்தருளி 
அருளொளியால்  ஐந்தொழிலும்  செயப்பணித்தே  அமுதளித்து 
மருவியநின்  மெய்யடியார்  சபைநடுவே  வைத்தழியாத் 
திருவளித்து  வளர்க்கின்றாய்  சிற்சபையில்  நடிக்கின்றாய். 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com