திருவருட்பா  93. சிவயோக நிலை

மதிமண்ட  லத்தமுதம்  வாயார  உண்டே 
பதிமண்ட  லத்தரசு  பண்ண  -  நிதிய 
நவநேய  மாக்கும்  நடராஜ  னேயெஞ் 
சிவனே  கதவைத்  திற. 
1
இந்தார்  அருளமுதம்  யானருந்தல்  வேண்டுமிங்கே 
நந்தா  மணிவிளக்கே  ஞானசபை  -  எந்தாயே 
கோவே  எனது  குருவே  எனையாண்ட 
தேவே  கதவைத்  திற. 
2
சாகா  அருளமுதம்  தானருந்தி  நான்களிக்க 
நாகா  திபர்சூழ்  நடராஜா  -  ஏகா 
பவனே  பரனே  பராபரனே  எங்கள் 
சிவனே  கதவைத்  திற. 
3
அருளோங்கு  தண்ணமுதம்  அன்பால்  அருந்தி 
மருள்நீங்கி  நான்களித்து  வாழப்  -  பொருளாந் 
தவநேயர்  போற்றும்  தயாநிதியே  எங்கள் 
சிவனே  கதவைத்  திற. 
4
வானோர்க்  கரிதெனவே  மாமறைகள்  சாற்றுகின்ற 
ஞானோ  தயஅமுதம்  நானருந்த  -  ஆனாத் 
திறப்பா  வலர்போற்றும்  சிற்றம்  பலவா 
சிறப்பா  கதவைத்  திற. 
5
எல்லாமும்  வல்லசித்தென்  றெல்லா  மறைகளுஞ்சொல் 
நல்லார்  அமுதமது  நானருந்த  -  நல்லார்க்கு 
நல்வாழ்  வளிக்கும்  நடராயா  மன்றோங்கு 
செல்வா  கதவைத்  திற. 
6
ஏழ்நிலைக்கும்  மேற்பால்  இருக்கின்ற  தண்ணமுதம் 
வாழ்நிலைக்க  நானுண்டு  மாண்புறவே  -  கேழ்நிலைக்க 
ஆவாஎன்  றென்னைஉவந்  தாண்டதிரு  அம்பலமா 
தேவா  கதவைத்  திற. 
7
ஈன  உலகத்  திடர்நீங்கி  இன்புறவே 
ஞான  அமுதமது  நானருந்த  -  ஞான 
உருவே  உணர்வே  ஒளியே  வெளியே 
திருவே  கதவைத்  திற. 
8
திரையோ  தசத்தே  திகழ்கின்ற  என்றே 
வரையோது  தண்ணமுதம்  வாய்ப்ப  -  உரைஓது 
வானேஎம்  மானேபெம்  மானே  மணிமன்றில் 
தேனே  கதவைத்  திற. 
9
சோதிமலை  மேல்வீட்டில்  தூய  திருவமுதம் 
மேதினிமேல்  நானுண்ண  வேண்டினேன்  -  ஓதரிய 
ஏகா  அனேகா  எழிற்பொதுவில்  வாழ்ஞான 
தேகா  கதவைத்  திற. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com