திருவருட்பா  4. சிவநேச வெண்பா

முன்னவனே  யானை  முகத்தவனே  முத்திநலம் 
சொன்னவனே  தூய்மெய்ச்  சுகத்தவனே  -  என்னவனே 
சிற்பரனே  ஐங்கரனே  செஞ்சடையஞ்  சேகரனே 
தற்பரனே  நின்தாள்  சரண். 
1
வீறுடையாய்  வேலுடையாய்  விண்ணுடையாய்  வெற்புடையாய் 
நீறுடையாய்  நேயர்கடந்  நெஞ்சுடையாய்  -  கூறு 
முதல்வாஓர்  ஆறு  முகவா  முக்கண்ணன் 
புதல்வாநின்  தாளென்  புகல். 
2
சீர்சான்ற  வேதச்  செழும்பொருளே  சிற்சொருபப் 
பேர்சான்ற  உண்மைப்  பிரமமே  -  நேர்சான்றோர் 
நாடும்  பரசிவமே  நாயேனுக்  கன்புநின்பால் 
நீடும்  படிநீ  நிகழ்த்து. 
3
நினைப்பித்தா  நித்தா  நிமலா  எனநீ 
நினைப்பித்தால்  ஏழை  நினைப்பேன்  -  நினைப்பின் 
மறப்பித்தாலி  யானும்  மறப்பேன்  எவையும் 
பிறப்பித்தாய்  என்னாலென்  பேசு. 
4
உருவாய்  உருவில்  உருவாகி  ஓங்கி 
அருவாய்  அருவில்  அருவாய்  -  ஒருவாமல் 
நின்றாயே  நின்ற  நினைக்காண்ப  தெவ்வாறோ 
என்தாயே  என்தந்தை  யே. 
5
வெஞ்சஞ்  சலமா  விகாரம்  எனும்பேய்க்கு 
நெஞ்சம்  பறிகொடுத்து  நிற்கின்றேன்  -  அஞ்சலென 
எண்தோள்  இறையே  எனையடிமை  கொள்ளமனம் 
உண்டோ  இலையோ  உரை. 
6
அப்பாலுன்  சித்தம்  அறியேன்  எனக்கம்மை 
அப்பாநின்  தாளன்றி  யார்கண்டாய்  -  இப்பாரில் 
சாதிஉரு  வாக்குந்  தளைஅவிழ்த்துத்  தன்மயமாம் 
சோதிஉரு  வாக்குந்  துணை. 
7
பேரறிவால்  கண்டும்  பெரியோர்  அறியாரேல் 
யாரறிவார்  யானோ  அறிகிற்பேன்  சீர்கொள் 
வெளியாய்  வெளிக்குள்  வெளியாய்  ஒளிக்குள் 
ஒளியாகி  நின்ற  உனை. 
8
வந்தித்தேன்  பிட்டுகந்த  வள்ளலே  நின்னடியான் 
சிந்தித்தேன்  என்றல்  சிரிப்பன்றோ  -  பந்தத்தாஞ் 
சிந்துசிந்திப்  பித்தெனது  சிந்தையுணின்  பொன்னருளே 
வந்துசிந்திப்  பித்தல்  மறந்து. 
9
தேனென்ற  இன்சொல்  தெரிந்துநினைப்  பாடுகின்றேன் 
நானென்  றுரைத்தல்  நகைஅன்றோ  -  வான்நின்ற 
ஒண்பொரு  உள்ளம்  உவந்தருளால்  இன்சொல்லும் 
வண்பொருளும்  ஈதல்  மறந்து. 
10
அண்டங்க  ளோஅவற்றின்  அப்பாலோ  இப்பாலோ 
பண்டங்க  ளோசிற்  பரவெளியோ  -  கண்தங்க 
வெம்பெருமால்  நீத்தவர்தம்  மெய்யுளமோ  தையலொடும் 
எம்பெருமான்  நீவாழ்  இடம். 
11
பூதமெங்கே  மற்றைப்  புலனெங்கே  பல்லுயிரின் 
பேதமெங்கே  அண்டமெனும்  பேரெங்கே  -  நாதமெங்கே 
மன்வடிவ  மெங்கே  மறையெங்கே  வான்பொரு 
பொன்வடிவம்  கொள்ளாத  போது. 
12
பேருருவோ  சோதிப்  பிழம்பாகும்  சின்மயத்தின் 
சீருருவோ  தேவர்  திருவுருவம்  -  நேருருவில் 
சால்புறச்சேர்  அண்ட  சராசரங்கள்  எல்லாம்நும் 
கால்விரற்பால்  நின்றொடுங்குங்  கால். 
13
இன்றோ  பகலோ  இரவோ  வருநாளில் 
என்றோ  அறியேன்  எளியேனே  -  மன்றோங்கும் 
தாயனையாய்  நின்னருளாம்  தண்ணமுதம்  உண்டுவந்து 
நாயனையேன்  வாழ்கின்ற  நாள். 
14
மண்ணாசை  வெற்பே  மறிகடலே  பொன்னாசை 
பெண்ணாசை  ஒன்றேஎன்  பேராசை  -  நண்ணாசை 
விட்டார்  புகழும்  விடையாய்நான்  பொய்யாசைப் 
பட்டால்  வருமே  பதம். 
15
தந்தையாய்  என்னுடைய  தாயாய்த்  தகைசான்ற 
சிந்தையாய்  என்னருமைத்  தேசிகனாய்  -  முந்தையாய் 
நீடு  மறைமுதலாய்  நின்றாயென்  னேநெஞ்சம் 
வாடுமெனை  ஆட்கொள்ளா  வாறு. 
16
ஊட்டுகின்ற  வல்வினையாம்  உட்கயிற்றால்  உள்ளிருந்தே 
ஆட்டுகின்ற  நீதான்  அறிந்திலையோ  -  வாட்டுகின்ற 
அஞ்சுபுல  வேடர்க்  கறிவைப்  பறிகொடுத்தென் 
நெஞ்சுபுலர்ந்  தேங்கு  நிலை. 
17
ஆமோ  அலவோ  அறியேன்  சிறியேனான் 
தாமோ  தரனும்  சதுமுகனும்  -  தாமே 
அடியா  தரிக்கும்  அரசேநின்  ஏவல் 
அடியார்குற்  றேவலடி  யன். 
18
உன்னால்  எனக்காவ  துண்டதுநீ  கண்டதுவே 
என்னால்  உனக்காவ  தேதுளது  -  சொன்னால்யான் 
தந்தார்வத்  தோடும்  தலைமேற்கொண்  டுய்கிற்பேன் 
எந்தாயிங்  கொன்றுமறி  யேன். 
19
சென்றுரைப்பார்  சொல்லில்  சிறியான்  பயமறியான் 
என்றுரைப்பார்  ஆங்கதுமற்  றென்னளவே  -  மன்றகத்தோய் 
அஞ்சேல்  விழியாரை  அந்தகனென்  பார்மொழியை 
அஞ்சேன்  சிறிதும்  அறிந்து. 
20
எந்தாய்நின்  அன்பர்தமக்  கின்னமுதம்  இட்டேத்திச் 
சிந்தா  நலமொன்றுஞ்  செய்தறியேன்  -  நந்தாச் 
சுவருண்ட  மண்போலும்  சோறுண்டேன்  மண்ணில் 
எவருண்  டெனைப்போல்  இயம்பு. 
21
உப்பிருந்த  ஓடோ  ஓதியோ  உலாப்பிணமோ 
வெப்பிருந்த  காடோ  வினைச்சுமையோ  -  செப்பறியேன் 
கண்ணப்ப  ருக்குக்  கனியனையாய்  நிற்பணியா 
துண்ணப்  பருக்கும்  உடம்பு. 
22
ஏலார்  மனைதொறும்போய்  ஏற்றெலும்புந்  தேயநெடுங் 
காலாய்த்  திரிந்துழலுங்  கால்கண்டாய்  -  மாலாகித் 
தொண்டே  வலஞ்செய்கழல்  தோன்றலே  நின்கோயில் 
கண்டே  வலம்செய்யாக்  கால். 
23
ஏசும்  பிறர்மனையில்  ஏங்கஅவர்  ஈயுமரைக் 
காசும்  பெறவிரிக்கும்  கைகண்டாய்  -  மாசுந்த 
விண்டுஞ்  சிரங்குனிக்கும்  வித்தகனே  நின்தலத்தைக் 
கண்டுஞ்  சிரங்குவியாக்  கை. 
24
வெங்கோடை  ஆதபத்தின்  வீழ்நீர்  வறந்துலர்ந்து 
மங்கோடை  யாதல்  வழக்கன்றோ  -  எங்கோநின் 
சீர்சிந்தாச்  சேவடியின்  சீர்கேட்டும்  ஆனந்த 
நீர்சிந்தா  வன்கண்  நிலை. 
25
வாயன்றேல்  வெம்மலஞ்செல்  வாய்அன்றேல்  மாநரக 
வாயன்றேல்  வல்வெறிநாய்  வாயென்பாம்  -  தாயென்றே 
ஊழ்த்தாதா  ஏத்தும்  உடையாய்  சிவஎன்றே 
வாழ்த்தாதார்  நாற்றப்பாழ்  வாய். 
26
வீட்டார்  இறைநீ  விடைமேல்  வரும்பவனி 
காட்டா  தடைத்த  கதவன்றோ  -  நாட்டாதி 
நல்லத்  துளையா  நதிச்சடையாய்  என்னுஞ்சீர்ச் 
செல்லத்  துளையாச்  செவி. 
27
புல்லங்  கணநீர்ப்  புழையென்கோ  புற்றென்கோ 
சொல்லும்  பசுமட்  டுளையென்கோ  -  சொல்லுஞ்சீர் 
வீயாத  பிஞ்ஞகப்பேர்  மெல்லினத்தின்  நல்லிசைதான் 
தோயாத  நாசித்  துளை. 
28
தோற்றமிலாக்  கண்ணுஞ்  சுவையுணரா  நாவுதிகழ் 
நாற்றம்  அறியாத  நாசியுமோர்  -  மாற்றமுந்தான் 
கேளாச்  செவியுங்கொள்  கீழ்முகமே  நீற்றணிதான் 
மூளாது  பாழ்த்த  முகம். 
29
மான்றாம்  உலக  வழக்கின்  படிமதித்து 
மூன்றா  வகிர்ந்தே  முடைநாற  -  ஊன்றா 
மலக்கூடை  ஏற்றுகினு  மாணாதே  தென்பால் 
தலக்கூடல்  தாழாத்  தலை. 
30
கல்லென்கோ  நீரடைக்குங்  கல்லென்கோ  கான்கொள்கருங் 
கல்லென்கோ  காழ்வயிரக்  கல்லென்கோ  -  சொல்லென்கோ 
இன்றா  லெனிலோ  எடுத்தாளெம்  மீன்றாணேர் 
நின்தாள்  நினையாத  நெஞ்சு. 
31
சொல்லுகின்ற  உள்ளுயிரைச்  சோர்வுற்  றிடக்குளிர்ந்து 
கொல்லுகின்ற  நஞ்சில்  கொடிதன்றோ  -  ஒல்லுமன்றத் 
தெம்மானின்  தாட்கமல  மெண்ணாது  பாழ்வயிற்றில் 
சும்மா  அடைக்கின்ற  சோறு. 
32
சோர்படைத்துச்  சோறென்றால்  தொண்டைவிக்கிக்  கொண்டுநடு 
மார்படைத்துச்  சாவுகினும்  மாநன்றே  -  சீர்படைக்க 
எண்ணுவார்  எண்ணும்  இறைவாநின்  தாளேத்தா 
துண்ணுவார்  உண்ணும்  இடத்து. 
33
ஓகோ  கொடிதே  உறும்புலையர்  இல்லினிடத் 
தேகோ  வதைத்துண்  செயலன்றோ  -  வாகோர்தம் 
வாழ்மனையில்  செல்லாது  வள்ளனினை  ஏத்தாதார் 
பாழ்மனையில்  சென்றுண்  பது. 
34
வீயுமிடு  காட்டகத்துள்  வேம்பிணத்தின்  வெந்தசையைப் 
பேயுமுடன்  உண்ணஉண்ணும்  பேறன்றோ  -  தோயுமயல் 
நீங்கஅருள்  செய்வோய்வெண்ணீறணியார்  தீமனையில் 
ஆங்கவரோ  டுண்ணு  மது. 
35
கண்குழைந்து  வாடும்  கடுநரகின்பேருரைக்கில் 
ஒண்குழந்தை  யேனுமுலை  உண்ணாதால்  -  தண்குழைய 
பூண்டாதார்க்  கொன்றைப்  புரிசடையோய்  நின்புகழை 
வேண்டாதார்  வீழ்ந்து  விரைந்து. 
36
கண்ணுதலே  நின்தாள்  கருதாரை  நேசிக்க 
எண்ணுதலே  செய்யேன்மற்  றெண்ணுவனேல்  -  மண்ணுலகில் 
ஆமிடத்து  நின்னடியார்க்  காசையுரைத்  தில்லையென்பார் 
போமிடத்திற்  போவேன்  புலர்ந்து. 
37
அங்கணனே  நின்னடிக்கோர்  அன்பிலரைச்  சார்ந்தோர்தம் 
வங்கணமே  வைப்பதினான்  வைத்தேனேல்  -  அங்கணத்தில் 
நீர்போல்  எனது  நிலைகெடுக  நிற்பழிசொற் 
றார்போ  லழிக  தளர்ந்து. 
38
பூவைவிட்டுப்  புல்லெடுப்பார்  போலுன்  திருப்பாதத் 
தேவைவிட்டு  வெம்பிறவித்  தேவர்களைக்  -  கோவையிட்டுக் 
கூவுவார்  மற்றவரைக்  கூடியிடேன்  கூடுவனேல் 
ஓவுவா  ராவ  லுனை. 
39
யாதோ  கனற்கண்  யமதூதர்  காய்ச்சுகருந் 
தாதோ  தழற்பிழம்போ  தானறியேன்  -  மீதோங்கு 
நாட்டார்தார்க்  கொன்றை  நதிச்சடையோய்  அஞ்செழுத்தை 
நாட்டாதார்  வாய்க்கு  நலம். 
40
என்னெஞ்சோர்  கோயில்  எனக்கொண்டோய்  நின்நினையார் 
தன்னெஞ்சோ  கல்லாமச்  சாம்பிணத்தார்  -  வன்நெஞ்சில் 
சார்ந்தவர்க்கும்  மற்றவரைத்  தானோக்கி  வார்த்தைசொல 
நேர்ந்தவர்க்கும்  கல்லாகும்  நெஞ்சு. 
41
வெள்ளமுதும்  தேனும்  வியன்கரும்பும்  முக்கனியின் 
உள்ளமுதும்  தெள்ளமுதும்  ஒவ்வாதால்  கள்ளமிலா 
நின்னன்பர்  தம்புகழின்  நீள்மதுரந்  தன்னைஇனி 
என்னென்ப  தையா  இயம்பு. 
42
பண்ணாலுன்  சீரினைச்சம்  பந்தர்சொல  வெள்ளெலும்பு 
பெண்ணான  தென்பார்  பெரிதன்றே  -  அண்ணாஅச் 
சைவவடி  வாஞான  சம்பந்தர்  சீருரைக்கில் 
தெய்வவடி  வாஞ்சாம்பர்  சேர்ந்து. 
43
எங்கோவே  யான்புகலி  எம்பெருமான்  தன்மணத்தில் 
அங்கோர்  பொருட்சுமையாள்  ஆனேனேல்  -  இங்கேநின் 
தாள்வருந்த  வேண்டேன்  தடைபட்டேன்  ஆதலினிந் 
நாள்வருந்த  வேண்டுகின்றேன்  நான். 
44
பூவுக்  கரையரும்வான்  புங்கவரும்  போற்றுதிரு 
நாவுக்  கரையரெனு  நன்னாம  -  மேவுற்ற 
தொண்டர்க்கு  நீகட்டுச்  சோறெடுத்தாய்  என்றறிந்தோ 
தொண்டர்க்குத்  தொண்டனென்பார்  சொல். 
45
எம்பரவை  யோமண்  ணிடந்தலைந்தான்  சுந்தரனார் 
தம்பரவை  வீட்டுத்  தலைக்கடையாய்  -  வெம்பணையாய் 
வாயிற்  படியாய்  வடிவெடுக்க  நேர்ந்திலனே 
மாயப்பெயர்  நீண்ட  மால். 
46
நண்ணித்  தலையால்  நடக்கின்றோம்  என்பதெங்கள் 
மண்ணில்  பழைய  வழக்கங்காண்  -  பண்ணிற்சொல் 
அம்மையார்  வாமத்தோய்  ஆயினுமுன்  காரைக்கால் 
அம்மையார்  போனடந்தார்  ஆர். 
47
வேத  முடிவோ  விளங்கா  கமமுடிவோ 
நாத  முடிவோ  நவில்கண்டாய்  -  வாதமுறு 
மாசகர்க்குள்  நில்லா  மணிச்சுடரே  மாணிக்க 
வாசகர்க்கு  நீஉரைத்த  வாறு. 
48
ஆர்கொண்டார்  சேய்க்கறியிட்  டாரே  சிறுத்தொண்டப் 
பேர்கொண்டார்  ஆயிடிலெம்  பெம்மானே  -  ஓர்தொண்டே 
நாய்க்குங்  கடைப்பட்ட  நாங்களென்பேம்  எங்கள்முடை 
வாய்க்கிங்  கிஃதோர்  வழக்கு. 
49
கோள்கொண்ட  நஞ்சங்  குடியேனோ  கூர்கொண்ட 
வாள்கொண்டு  வீசி  மடியேனோ  -  கீள்கொண்ட 
அங்கோவ  ணத்தழகா  அம்பலவா  நின்புகழை 
இங்கோதி  வாழ்த்தாத  யான். 
50
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com