
கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
கண்ணுடையோய் சிதையா ஞானப்
பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
மலர்வாயோய் பொய்ய னேன்றன்
மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
கசிந்துருக்கும் வடிவத் தோயே.
உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
கலகநிலை அறியாத காட்சி யாகிக்
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி
யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்
களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
விலகலுறா நிபிடஆ னந்த மாகி
மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்
இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.
வித்தாகி முளையாகி விளைவ தாகி
விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
முதலாகி மனாதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
அரமாகி ஆனந்த போத மாகி
ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி
இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்
பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி
மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்
அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.
நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா
நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்
தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்
சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
மன்மயமாய் வாசகா தீத மாகி
மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே.
அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
வாயாகி வாயிறந்த மவுன மாகி
மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
அளவாகி அளவாத அதீத மாகிப்
பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
புறமாகி அகமாகிப் புனித மாகி
மன்னாகி மலையாகிக் கடலு மாகி
மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.
அரிதாகி அரியதினும் அரிய தாகி
அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
உருவாகி உருவினில்உள் உருவ மாகி
உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
அருவாகி அருவினில்உள் அருவ மாகி
அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
மருவாகி மலராகி வல்லி யாகி
மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.
சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
அவையனைத்தும் அணுகாத அசல மாகி
இகலுறாத் துணையாகித் தனிய தாகி
எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.
வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.
சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்
சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி
வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
இகமாகிப் பதமாகிச் சமய கோடி
எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்
பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே.
விதியாகி அரியாகிக் கிரீச னாகி
விளங்குமகேச் சுரனாகி விமல மான
நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.
மானாகி மோகினியாய் விந்து மாகி
மற்றவையால் காணாத வான மாகி
நானாகி நானல்ல னாகி நானே
நானாகும் பதமாகி நான்றான் கண்ட
தானாகித் தானல்ல னாகித் தானே
தானாகும் பதமாகிச் சகச ஞான
வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற
மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே.
மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி
வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்
தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்
தானாகித் தனதாகித் தானான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.
மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.
பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.
தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்
வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்
தாபரமே சங்கமமே சாற்று கின்ற
ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்
துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்
தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே.
விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.
மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்
புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
வேதமே வேதத்தின் விளைவே வேத
வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
நாதமே நாதாந்த நடமே அந்த
நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
போதமே போதமெலாம் கடந்து நின்ற
பூரணமே யோகியருள் பொலிந்த தேவே.
ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
காலமே காலமெலாம் கடந்த ஞானக்
கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
கோலமே குணமேஉட் குறியே கோலங்
குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
சீலமே மாலறியா மனத்திற் கண்ட
செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.
தத்துவமே தத்துவா தீத மேசிற்
சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
யோகமே யோகத்தின் பயனே யோகத்
தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம்
புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்
திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
மோகமே மோகமெலாம் அழித்து வீறு
மோனமே மோனத்தின் முளைத்த தேவே.
காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
சூட்சியே சூட்சியெலாம் கடந்து நின்ற
துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
வானமுதே ஆனந்த மழையே மாயை
வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை
அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை
ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்
கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன
வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே.
வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்
இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற
அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்
ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.
தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்
தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்
இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்
பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக்
கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்
கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.
சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்
கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.
சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்
அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு
நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்
தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி
வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே.
வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப
வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்
சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்
பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே
தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.
அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
காணாமற் காண்கின்ற காட்சியே உள்
அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
வான்காணா மறைகாணா மலரோன் காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.



