
துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.
என்னே முறையுண் டெனில்கேள்வி உண்டென்பர் என்னளவில்
இன்னே சிறிதும் இலையேநின் பால்இதற் கென்செய்குவேன்
மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பரிதாம்
பொன்னேமின் னேர்சடைத் தன்னே ரிலாப்பரி பூரணனே.
தண்டாத சஞ்சலங் கொண்டேன் நிலையைஇத் தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள்
துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலை தூய்மையிலா
அண்டார் பிழையும் பொறுப்போய் இதுநின் அருட்கழகே.
பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண்
ஐயாஎன் உள்ளம் அழலார் மெழுகொத் தழிகின்றதால்
பையார் அரவ மதிச்சடை யாய்செம் பவளநிறச்
செய்யாய் எனக்கருள் செய்யாய் எனில்என்ன செய்குவனே.
விடமிலை யேர்மணி கண்டாநின் சைவ விரதஞ்செய்யத்
திடமிலை யேஉட் செறிவிலை யேஎன்றன் சித்தத்துநின்
நடமிலை யேஉன்றன் நண்பிலை யேஉனை நாடுதற்கோர்
இடமிலை யேஇதை எண்ணிலை யேசற் றிரங்கிலையே.
விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக்
கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய்
பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட்
பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே.
விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ்
சடையுடை யாய்கொன்றைத் தாருடை யாய்கரம் தாங்குமழுப்
படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால்
நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே.
கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.
நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு
தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ
கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்
ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே.
பொய்யோ அடிமை உரைத்தல்எந் தாய்என்னுட் போந்திருந்தாய்
ஐயோநின் உள்ளத் தறிந்ததன் றோஎன் அவலமெல்லாம்
கையோட வல்லவர் ஓர்பதி னாயிரங் கற்பநின்று
மெய்யோ டெழுதினுந் தான்அடங் காத வியப்புடைத்தே.
தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.
கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம்
பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம்
வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர்
துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே.
வீணே பொழுது கழிக்கின்ற நான்உன் விரைமலர்த்தாள்
காணேன்கண் டாரையுங் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும்
பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
நாணேன் விலங்கிழி யாணே யெனுங்கடை நாயினனே.
நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று
தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ
ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல்
கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே.
மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.
அன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்
நின்பாலென் துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால்
துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ
என்பால் இரங்கிலை என்பாற் கடல்பிள்ளைக் கீந்தவனே.
என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே.
பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே.
சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.
அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.
கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே.
சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே.
வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.
அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை
எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொற்பூத்
தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக்
கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு கேன்எண் குணக்குன்றமே.
நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே.
தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.
நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ
குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான்
படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே.
ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.
சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.
நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே.
பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.
நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.
மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.
கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே.
ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்முடித்த
நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.
நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே.
விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்அருளக் குறித்திலையேல்
பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.
சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே.
ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.
நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே.
உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.
மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந்
தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்
ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க
நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே.
வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே.



